வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (27/10/2017)

கடைசி தொடர்பு:08:03 (27/10/2017)

கடன் சுமை தீர எளிமையான பரிகாரங்கள்

வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகள் வரும்போது கடன் சுமை உருவாகிறது. கடனில் சுபக் கடன், அசுப கடன் என்று இரண்டு உள்ளது. நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுபக் கடன் என சொல்லப்படுகிறது. விபத்து, நோய்கள் போன்றவைக்கு வாங்கும் கடன்கள் அசுப கடன் எனப்படுகிறது. கடன் வாங்கும் பழக்கம் என்பது பொல்லாதது. நெருப்பில் மிச்சமும், பகையில் மிச்சமும், கடனில் மிச்சமும் இருக்கவே கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. இவை மூன்றுமே மீண்டும் மீண்டும் பெருகி ஒருவனை அழித்துவிடும். எனவே, கடனே வாங்காமல் வாழக்கையை அமைத்துக்கொள்வதுதான் சிறப்பானது. ஒருவேளை கடன் சுமை அதிகமானால் என்ன செய்வது? அதற்கு ஜோதிடமும் ஆன்மிகமும் சில வழிகளை சொல்கிறது.

கடன் பரிகாரங்கள்

ஜோதிட சாஸ்திரப்படி ருணம் என்றால் கடன். ஒருவனுடைய கடன் சுமைக்கு காரணமே அந்தந்த காலகட்டத்தில் அவனுக்கு உண்டாகும் தசாபுக்திகளே காரணம் என்று ஜாதகம் கூறுகிறது. கடனுக்கான காரணம் என்று ஆயிரம் முறைகளை ஜோதிடம் கூறினாலும், அதை தீர்க்கும் வழிகள் என சிலவற்றைக் கூறுகிறது. அஸ்வினி, அனுஷம் நட்சத்திர நாளில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், கட்டாயம் அந்தக் கடன் விரைவில் தீரும் என்கிறது.  செவ்வாய்க்கிழமை வரும் செவ்வாய் ஓரையில் கொஞ்சம் பணத்தைக் கடனை அடைக்க கொடுத்தாலும் விரைவில் கடன் தீருமாம். ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி, சனிக்கிழமை சதுர்த்தி திதி மற்றும் குளிகன் நேரங்களில் அடைக்கப்படும் கடனால் மீண்டும் கடன் வாங்கும் நிலை உண்டாகாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

கடன் சுமை

பவுர்ணமி பிரதோஷ காலத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் கடன் தொல்லை தீரும். ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம் பாடினாலும் கடன் தீரும். குபேர வேளைகளில் செய்யப்படும் குபேர பூஜை, சொர்ணாகர்ஷண பைரவர் பூஜைகள் கடன் தொல்லையை நீக்கும். விரய செலவுகளை உண்டாக்கும் செவ்வாய்க் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான். எனவே, சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டாலும் எந்தக் கடனும் தீரும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கிறார்கள். கடன் என்பது காலைச் சுற்றியிருக்கும் பாம்பு என்பார்கள். எனவே, அது நம்மை தாக்குமுன்னர் விழிப்பாகி அதன் தொல்லையில் இருந்து விடுபடுவோம்.