8 நாடுகள்... 2 ஆயிரம் சாதனையாளர்கள்! - சென்னை சிறுமியின் வேதியியல் சாதனை | recognition for a chennai child in an international stage

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (27/10/2017)

கடைசி தொடர்பு:13:15 (27/10/2017)

8 நாடுகள்... 2 ஆயிரம் சாதனையாளர்கள்! - சென்னை சிறுமியின் வேதியியல் சாதனை

வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதில் சாதனை படைத்து ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் நான்சி. சென்னையைச் சேர்ந்த இந்த ஏழு வயது சிறுமி, தற்போது உலக அரங்கில் 2000 சர்வதேச சாதனையாளர்கள் மத்தியில் கவுரவிக்கப்பட உள்ளார்.

நான்சி

சென்னை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்- லிசி பிரான்சிஸ் தம்பதியின் மகள் நான்சி. சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு, படிப்பு என ஆர்வம் இருந்தாலும், வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டார். அண்மையில், வேதியியலில் உள்ள 118 மூலக்கூறுகளையும் வரிசை மாறாமல் 64 விநாடிகளில் ஒப்புவித்து ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து, பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்களை ஒப்புவித்து சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ‘கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானிகளும்’ என்ற தலைப்பின்கீழ் ஒப்புவித்து கின்னஸ் சாதனை செய்ய இருக்கிறார். இதற்கான அனுமதிக்காக நான்சி காத்திருக்கிறார்.

இந்நிலையில் நான்சிக்கு மேலும் ஒரு சிறப்பானதொரு அங்கீகாரத்தை அளிப்பதற்காக அழைத்திருக்கிறது, ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’. எட்டு நாடுகளிலிருந்து 2,000 தேசிய மற்றும் சர்வதேச சாதனையாளர்கள் வருகிற நவம்பர் மாதம் 12-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லியில் ’உலக அரங்கில் இந்தியச் சாதனையாளர்கள்’ என்ற நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைசிறந்த 100 சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். எட்டு நாடுகளைச் சேர்ந்த ‘தேசியச் சாதனையாளர்கள் புத்தகம்’ வெளியீடுகளின் தலைமை எடிட்டர்கள் இந்த 100 சாதனையாளர்களுக்கும் பரிசளிக்க உள்ளனர். இந்த ’தலைசிறந்த 100 இந்தியச் சாதனையாளர்கள்’ பட்டியலில் சென்னையைச் சேர்ந்த நம் நான்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் கவுரவிக்கப்பட உள்ள நான்சியின் தாயார் லிசியிடம் பேசினோம். "சிறு வயதிலிருந்தே மிகுந்த சுட்டியாக இருப்பாள். ஒருநாள் தற்செயலாக இயற்பியலில் உள்ள நியூட்டன் விதி உள்ளிட்ட முக்கிய விதிகளைப் பற்றிக் கூறும்போது, அதை உடனடியாகப் புரிந்துகொண்டு திருப்பிக் கூறினாள். இது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. ஆனால், இயற்பியல் விதிகளைவிட வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பது அவளுக்கு எளிதாகிவிட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வேதியியல் மூலக்கூறுகளைக் கூறுவதில் ஆர்வத்தைக் காட்டினாள். பள்ளி ஆசிரியைகளும் நான்சியை ஊக்கப்படுத்தினர். ‘இந்தியன் ரெக்கார்ட்ஸ்’-க்கான சாதனையை எளிதாகக் கடக்க முடிந்தது. இன்று அதற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. நான்சி கின்னஸ் சாதனைக்கும் முயன்று வருகிறாள். சர்வதேச அளவிலும் நான்சி சாதனை படைப்பாள்" என்றார், உற்சாகத்தோடு.