வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (27/10/2017)

கடைசி தொடர்பு:14:05 (27/10/2017)

மணல் கொள்ளையைத் தடுத்தவருக்கு நேர்ந்த கொடுமை! - அ.தி.மு.க நிர்வாகிக்கு எதிராகப் பொங்கிய பெண்

மணல் கடத்தலைத் தடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக என் கணவரைக் கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்திருக்கிறார் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ். அவரிடமிருந்து என் கணவரைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு பெண் கண்ணீர் மல்கக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

புகார் கொடுத்த தூர்கா தேவியிடம் பேசினோம். "அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள முள்ளுகுறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் இவர் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார் என்று என் கணவர் பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடந்த மாதம் மணல் அள்ளியபோது பொது மக்களும் சம்பவ இடத்திலேயே லாரி மற்றும் ஜே.சி.பி வாகனத்தையும் சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இவர் லாரிகள்மீது அபராதமும் விதித்தார்கள் அதிகாரிகள்.

என் கணவர் ஆறுமுகம் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வேலைக்குச் செல்வதாக டூவீலரில் ஆதனகுறிச்சி அருகே சென்றபோது நான்கு பேருடன் வந்த சுரேஷ், அவர் தம்பி ரமேஷ் இருவரும் என் கணவரை அடித்தது மட்டுமல்லாமல் அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டார்கள். கணவரை மீட்கக் கோரி கிராம மக்களுடன் தளவாய் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தேன். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரிக்கச் சென்றபோது முதுகுளம் என்ற இடத்தில் லாரியில் கணவர் ஆறுமுகத்தை அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். காவல்துறையினர் லாரியை மடக்கிப் பிடித்து என் கணவரை மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனர்" என்றார்.

மீட்கப்பட்ட ஆறுமுகத்திடம் பேசியபோது, "ஆதனகுறிச்சியில் சுரேஷ் அவர் தம்பி ரமேஷ் மற்றும் சிலர் என்னைத் தாக்கிக் கடத்திச் சென்று ஆண்டிமடம் அருகேயுள்ள அழகாபுரம் கிராமத்தில் வைத்து தன்னை சரமாரியாக அடித்தார்கள். போலீஸார் தேடுவது தெரிந்து வேறு இடம் மாற்றும்போது என்னை போலீஸார் மீட்டனர்" என்றார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், சுரேஷ், ரமேஷ் ஆகியோர்மீது கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஐந்துக்கும் மேற்பட்ட மணல் கடத்தல் வழக்குகள் இவர்மீது நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.