வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (27/10/2017)

கடைசி தொடர்பு:13:50 (27/10/2017)

டெங்கு ஒழிப்புப் பணியின்போது நாய் குரைத்த வீட்டுக்கு 10,000 அபராதம் விதித்த ஆட்சியர்!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆய்வுப் பணியின்போது, நாய் குரைத்த வீட்டில் டெங்குப் புழுக்கள் இருந்ததைக் கண்டதால் ஆத்திரம் அடைந்த ஆட்சியர், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

டெங்கு ஒழிப்பு பணி

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. அதை முற்றிலுமாகத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார். 2,000 பேரைக் களத்தில் இறக்கி சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ள அவர், காலையிலேயே பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகிறார். டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் கட்டடங்களுக்கு அவர் அபராதம் விதித்து வருகிறார்.

பாளையங்கோட்டை ஆயுதப் படை காவலர் குடியிருப்புப் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வுசெய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலமாக நடைபெற்று வரக்கூடிய கட்டடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தார். மற்றொரு கட்டடத்தின் 2 வது மாடியில், கொசுப்புழுக்கள் இருந்ததால் அந்தக் கட்டடத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டது. நெல்லையில் உள்ள இரு பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கட்டட அனுமதி ரத்து

இந்த நிலையில், பாளையங்கோட்டை, பர்கிட்மாநகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஒரு வீட்டில் டெங்கு கொசுப் புழு கண்டறியப்பட்டதால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தார். அதன் அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் உள்ளே நாய் கட்டப்படாததால் குரைத்துக்கொண்டே ஓடி வந்தது. அப்போது, வெளியே வந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆட்சியரை அடையாளம் தெரியவில்லை. உடன் வந்திருந்த அதிகாரிகள், வீட்டு உரிமையாளரிடம், வந்திருப்பது ஆட்சியர் என்பதைத் தெரியப்படுத்தியதும் அவர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். அந்த வீட்டில் ஆய்வுசெய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ரூ.20,000 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் பதறிப்போன வீட்டின் உரிமையாளர், ஆட்சியரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் முறையிட்டார். அதனால் அபராதத் தொகை ரூ.10,000 எனக் குறைக்கப்பட்டது. 

பின்னர், அங்கிருந்து செல்லும் முன்பாக வீட்டு உரிமையாளரை அழைத்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’நீங்க நாயைக் கட்டிப்போடாம எனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கலை என்பதற்காக இந்த அபராதம் விதிக்கவில்லை. உங்க வீட்டில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்துச்சு. குப்பைகளை குவித்து வைத்திருந்ததற்காகவும்தான் இந்த அபராதம்’ என விளக்கம் அளித்துவிட்டுச் சென்றாராம். ஆட்சியரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் விவாதித்து வருகிறார்கள்.