Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கமிஷன் கண்துடைப்பு... சி.பி.ஐ தான் விசாரிக்கணும்!’ - சசிகலா, பழனிசாமிக்கு எதிராக சீறும் தீபா #VikatanExclusive

ஜெயலலிதா

Chennai: 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு என்று  தீபா தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார். அவர், சென்னை, ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சையில் இருந்தபோது, சசிகலா குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக எந்தப் புகைப்படங்களும் வெளியாகவில்லை. இதனால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய தர்மயுத்தத்தில் முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கைகுலுக்கியதோடு சசிகலா, தினகரன் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தனர்.

சிகிச்சையின்போது ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை என்று வெளிப்படையாகவே அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனால், ஜெயலலிதா மரணத்தின் சந்தேகப் பார்வை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விழுந்துள்ளது. விசாரணை கமிஷனின் பிடியில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல. ஆளுநர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், அப்போலோ மருத்துவர்கள் ஆகியோர் உள்ளனர். இதில், சசிகலா குடும்பத்தினர் பீதியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன .

தீபா

இந்தச் சூழ்நிலையில் விசாரணை கமிஷன் குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் கேட்டதற்கு. "என்னுடைய அத்தை ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அவரைச் சந்திக்க அங்கு சென்றேன். ஆனால், ஜெயலலிதாவைச் சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சசிகலா குடும்பத்தினர் என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்களோடு ஜெயலலிதாவின் உடல்நலத்தை அறிய காத்திருந்தேன். ஆனால், 75 நாள்கள் சிகிச்சைக்குப்பிறகு அவர் மரணமடைந்த தகவல் எனக்குக் கிடைத்தது.

ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின்போது, அவரது உடல் அருகே நிற்கக் கூட எனக்கு அனுமதியில்லை. தொண்டர்களைப் போல நானும் வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினேன். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக நான் வலியுறுத்தியபோது, அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தபிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷன் விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

அந்த கமிஷனால் எந்தளவுக்கு விசாரணை நடத்த முடியும் என்பது தெரியவில்லை. ஆளுநர், முதல்வர் என உயர் பதவியிலிருப்பவர்களிடம் முழுமையாக விசாரிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால்தான் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவருகிறேன். சி.பி.ஐ. விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளேன். சி.பி.ஐ. விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதோடு மக்கள் மன்றத்தில் ஜெயலலிதா மரணத்துக்கு நீதியைத் தேடி பயணிக்கவும் முடிவுசெய்துள்ளேன். முதல் கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கூட்டம் கன்னியாகுமரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் வீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களில் என்னுடைய மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசிடம் தெரிவித்துள்ளது. அதிலும் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

அ.தி.மு.க. தீபா அணியின் மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்ல ராஜாமணியிடம் கேட்டதற்கு, "ஓய்வு பெற்ற நீதிபதிசெல்ல ராஜாமணி ஆறுமுகசாமி அறிவித்தபடி ஜெயலலிதா மரணத்தில் எங்களின் சந்தேகத்துக்குரிய சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று அஃபிடவிட்களைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதியால், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அப்போதைய முதல்வரும் தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், அமைச்சர்களிடம் விசாரணை நடத்த முடியுமா என்பதுதான் எங்களுடைய கேள்விக்குறி.

ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட இசட்பிளஸ் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள யார் உத்தரவிட்டது என்ற கேள்விக்குப் பதில் கிடைக்க வேண்டும். மேலும், சசிகலாவின் கணவர் நடராசனின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சென்னையிலேயே நடத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற முயற்சிகள் ஏன் ஜெயலலிதாவுக்கு நடக்கவில்லை. இதுபோன்ற எங்களின் கேள்விகளுக்கு இந்த விசாரணை கமிஷனில் பதில் கிடைக்குமா என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால்தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும்வரை போராடத் தயாராக உள்ளோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close