வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (27/10/2017)

கடைசி தொடர்பு:14:35 (27/10/2017)

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்கள் இடமாற்றம் செய்ய பூமி பூஜை!

 ராமேஸ்வரம் கோயில் தூய்மைக்கு இடையூறாக அமைந்துள்ள தீர்த்தங்கள் இடம் மாற்றுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
 

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்கள் இடம் மாற்ற பூமி பூஜை

இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் பிராகார பகுதிகளில் 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. மூர்த்தி, தீர்த்தம், தலம் என முப்பெருமை கொண்ட இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு தீர்த்தமாடும் பக்தர்கள் ஈரத்துடன் சுவாமி தரிசனம் செய்வதால் கோயிலின் பிரதான பிராகாரமான முதல் பிராகாரம் மற்றும் சுவாமி சந்நிதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன் துர்நாற்றமும் வீசியது.


இதையடுத்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் பிராகாரத்தில் இருந்த 3 தீர்த்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், பக்தர்கள் ஈர துணியுடன் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் கோயிலின் 2-ம் பிராகாரத்தில் அமைந்துள்ள சில தீர்த்தங்களால் தண்ணீர் தேங்கியது.

மேலும், 4 தீர்த்தங்கள் குறுகலான பகுதியில் அமைந்திருப்பதால் கூட்ட நேரங்களில் இந்தத் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இதனால் 22 தீர்த்தங்களிலும், முழுமையாகப் பக்தர்கள் நீராட முடியாத நிலை உருவானது. இதையடுத்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராட வழிவகை செய்யக் கோரியும், கோயிலின் உட்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க உத்தரவிடக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மாதம் ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து குறுகலான பகுதியில் அமைந்துள்ள மற்றும் பிராகாரங்களில் தூய்மைக் குறைவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தீர்த்தங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறையின் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கோயிலில் உள்ள மகாலட்சுமி, சாவித்திரி, காயத்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம்  ஆகிய 6 தீர்த்தங்கள் கோயிலின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாற்று இடங்களில் தீர்த்தம் தோண்டும் பணியைக் கோயில் தக்கார் குமரன் சேதுபதி துவக்கி வைத்தார். இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, ராணி லட்சுமி நாச்சியார், முன்னாள் அறங்காவலர் நாராயணன் செட்டியார், உதவி கோட்டப் பொறியாளர்  மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், திருக்கோயில் பேஷ்கார்கள் கமலநாதன், ககாரின், அண்ணாதுரை,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.