அதிகாரிகளைப் பதறவைத்த பாதாள அறை; மூட்டை மூட்டையாகப் போதைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்டடத்தில் ஏணிப்படியின் கீழ் பாதாள அறை அமைத்து தடைசெய்யப்பட்ட 160 மூட்டை குட்கா, பான்பராக் மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல்செய்தனர். அந்த கிட்டங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாகர்கோவிலில் ஒரு கட்டடத்தில் ரகசிய அறை அமைத்துத் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி குமார பாண்டியன் தலைமையில் ஒரு குழு நாகர்கோவிலில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது நாகர்கோவில் கோட்டார் முதலியார் தெற்குத் தெருவில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் ஏணிப்படியின் கீழ் ரகசிய அறை அமைத்து அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் மற்றும் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 160 மூடைகள் இருந்தது தெரியவந்தது. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பொருள்கள் எங்கிருந்து வந்தது. அவைகளைப் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பதுகுறித்து கட்டட உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!