Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`கட்-அவுட் கலாசாரத்துக்கு கெட்-அவுட்’- நீதிமன்ற தீர்ப்புக்கு சல்யூட் வைக்கும் ஸ்டாலின்

தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர்களோ, கட்-அவுட்டுகளோ வைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை வரவேற்றிருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், `பொதுமக்களின் கடும் வெறுப்புக்குள்ளாகி இருக்கின்ற பேனர், கட்-அவுட் கலாசாரத்தைத் தவிர்ப்போம் என கழகத் தொண்டர்களுக்கு பலமுறை அன்பு வேண்டுகோள் விடுத்ததுடன், உங்களில் ஒருவனாக அதுகுறித்து கடிதமும் எழுதியிருக்கிறேன். ஆடம்பரமான இத்தகைய பேனர், கட்அவுட்டுகளுக்குப் பதில் கழகத்தின் இருவண்ணக் கொடிகளை பறக்கவிட்டு, நமது கொள்கை முழக்கத்தைத் தொடர்ந்திடுவோம் என்றும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் பல இடங்களிலும் கழகத் தொண்டர்கள் இதைக் கடைப்பிடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதையும், ஒருசிலர் ஆர்வமிகுதியின் காரணமாக ஆடம்பர விளம்பரங்களான பேனர், கட்அவுட்டுகளை வைப்பதால் ஏற்பட்ட மனவருத்தங்களையும் முன்பே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

பல நேரங்களில் பேனர், கட்-அவுட்டுகளை அகற்றினால்தான் நிகழ்ச்சிக்கு வருவேன் என அன்புப் பிடிவாதம் காட்டிய நிகழ்வுகளும் உண்டு. எளிமையான விளம்பரங்கள், எங்கெங்கும் கழக கொடிகள், அன்பு பொங்கும் உற்சாக வரவேற்பு இவையே கழகத்தின் நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதைக் கழகத்தின் செயல் தலைவர் என்றமுறையில் தொடர்ந்து வலியுறுத்தி, ‘கட்-அவுட் கலாசாரத்துக்கு கெட்-அவுட்’ சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது கவனத்துக்கு உரியதாகும்.

போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையிலும் அமையும் இத்தகைய பேனர், கட்-அவுட் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும் என கருதக்கூடிய அனைவரும் இந்தத் தீர்ப்பை வரவேற்பார்கள். அதேவேளையில், தனிப்பட்ட முறையில் திருமணம், வரவேற்பு, பிறந்தநாள், காதணி போன்ற குடும்ப விழாக்களை நடத்துவோர், உரிய அனுமதி பெற்று, விழா நடைபெறும் இடத்தில், தங்கள் குடும்பத்தினரின் படங்களுடன் பேனர் வைப்பதற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பது நமது விருப்பமும் வேண்டுகோளாகும்.

எனினும், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாசாரத்தை உருவாக்கி, இந்தியாவுக்கே தவறான முன்னுதாரணத்தைக் காட்டிவரும் ‘குதிரை பேர’ அ.தி.மு.க., அரசு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவது சட்டமீறல் மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, உயிருடன் உள்ளவர்களின் படங்களுடன் பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதிசெய்யப்பட்டு இருந்த நிலையில், திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நகரெங்கும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர், கட்-அவுட்டுகளில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு இணையாக, தற்போதைய முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதன்மூலம், ‘தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நிர்வாகம் ஒரு நடைப்பிணம்’, என்பதை ஆட்சியாளர்கள் தாங்களாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இப்படிப்பட்ட பேனர், கட்-அவுட் அத்துமீறல்கள் அப்பட்டமாக அரங்கேறியுள்ளன.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கத்தால், டெங்குக் காய்ச்சல் உயிர்பலிகள் நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், கந்துவட்டி கொடுமையினால் தீக்குளிப்பு உயிர்ப்பலிகளும், தற்கொலை முயற்சிகளும் தொடர்கின்றன. இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், எம்.ஜி.ஆருக்கு விழா என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்கு கட்-அவுட் வைத்துக்கொள்ளும் சுயமோகிகளின் கைகளில் சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு. தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் நிலைக்குக் காரணமான உருவங்களை எல்லாம் உயர்ந்து நிற்கும் பேனர், கட்-அவுட்டுகளில், பார்க்கும் பொதுமக்கள், “கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?” எனக் கேட்கிறார்கள். மக்களின் உயிரையும் நலனையும் மதிக்காத ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசு, நீதிமன்றத்தையும் அவமதித்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. எத்தர்களின் பித்தலாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?' என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement