லாட்டரி கும்பல் தலைவனைப் பிடிக்க சென்னை போலீஸின் செல்போன் பிளான்!

சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்கும் கும்பலை பிடிக்க போலீஸார் கேமராவுடன் அலைந்துள்ளனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற கும்பலின் தலைவனை போட்டோ எடுத்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். 

சென்னையில் ஒன் நம்பர் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. அதைத்தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீஸாரைப் பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓட்டம்பிடித்தார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் விசாரித்தபோது அவரது பெயர் சந்திரன், கஞ்சா வியாபாரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்திரனின் கூட்டாளிகளைப் பிடிக்க போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், மாரியம்மாள், தன்ராஜ் ஆகியோர் சிக்கினர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரனின் கூட்டாளிகளில் ஒருவரான லோகநாதன் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். இதையடுத்து சந்திரன், மாரியம்மாள், தன்ராஜ் ஆகியோரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, வில்லிவாக்கம், அயனாவரம் பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் நடத்திய சோதனையில் லாட்டரி சீட்டு விற்பனைக் கும்பல் தலைவன் சொக்கலிங்கத்தை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து சொக்கலிங்கத்தின் கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரிகள் கிருஷ்ணவேணி, மஞ்சுளா ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது அவர்களின் கூட்டாளிகள், உறவினர்கள் மூலம் கஞ்சா விற்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை நடத்தி மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை ரகசியமாக நடந்துவருகிறது. இதனால், அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டோம். எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி லாட்டரி விற்பதாகச் சந்தேகித்த நபரை கேமராவுடன் பின்தொடர்ந்தோம். பைக்கில் சென்ற அந்த நபர், லாட்டரி சீட்டுக்களை விற்ற போது அதை ரகசியமாக செல்போனில் படம் பிடித்தோம். பிறகு அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தோம். விசாரணையில் அவரது பெயர் சொக்கலிங்கம் என்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்கும் கும்பலின் தலைவன் என்று தெரியவந்தது" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!