வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:20 (27/10/2017)

’குஞ்ஞப்துல்லாவின் எழுத்துகளில் பாசாங்கற்ற இயல்பும் யதார்த்தமும் வெளிப்படும்!’ - மு. யூசூஃப் உருக்கம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 77. 

எழுத்தாளர்

மருத்துவரான குஞ்ஞப்துல்லா, எழுத்தின்மீது தீராக் காதல்கொண்டவர். 1978-ம் ஆண்டில் அவரது `ஸ்மாரக சிலகள்'  நாவலும், 1980-ம் ஆண்டில் `மலமுகலிலே அப்துல்லா' என்ற நாவலும் என இரண்டு முறை கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளைக் குவித்தவர். இந்திய மொழிகளில் மிக இளம் வயதிலேயே சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் குஞ்ஞப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள இலக்கியத்தின் நவீனத்துவ அடையாளம் எனக் குஞ்ஞப்துல்லா போற்றப்படுகிறார். `மருஞ்ஞு', `கண்யாவனங்கள்', `கதி', `அலிகர் கதகள்' ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்கப் படைப்புகள். இவரது படைப்பில் வெளியான `ஸ்மாரக சிலகள்' என்னும் நாவல்,  `மீசான் கற்கள்' என்னும் பெயரில் குளச்சல் மு.யூசூஃப்பால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும் வெளிவந்துள்ளது. 

நிலப்பிரபுத்துவத்தின் சரிவைச் சொல்லும் `ஸ்மாரக சிலகள்' என்னும் நவீனத்துவ நாவலை, அசல்தன்மையுடன் மொழிபெயர்த்த எழுத்தாளர் குளச்சல் மு.யூசூஃப். இவர், குஞ்ஞப்துல்லா குறித்த நினைவைப் பகிர்ந்துகொண்டார்.

``பொதுவாக தனது மேதைமையை வெளிக்காட்டிக்கொள்வதற்காக எழுதுபவர்கள் சிலர் உண்டு. அப்படியல்லாமல், குழந்தையின் வெகுளித்தனம் நிறைந்த எனது நண்பர் குஞ்ஞப்துல்லாவின் எழுத்துகளில், பாசாங்கற்ற இயல்பும் யதார்த்தமும் வெளிப்படும். கேரளாவில்  மலையாள இலக்கியத்தில் நவீன, யதார்த்தமான போக்கை உருவாக்கியவர்களுள் மிக முக்கியமானவர் இவர். கசப்பான உண்மையுடனான நகைச்சுவையை, இயல்பாக அதன் போக்கில் சொல்லிய `ஸ்மாரக சிலகள்' நவீனத்துவ இலக்கியத்தின் மிகப்பெரிய மைல்கல். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது" என்று தெரித்தார்.

``கேலிச்சித்திரக் கலைஞனின் கண்களின் ஊடாக வாழ்க்கையைப் பார்த்தவர் குஞ்ஞப்துல்லா. சாமான்யரின் மொழியில் வாசிப்பவரோடு இணைபவர். அவரது ஈடற்ற படைப்பான `ஸ்மாரக சிலகள்' வடக்கு மலபார் மக்களின் மதம் கடந்த ஒற்றுமையைப் பறைசாற்றியது'' எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க