'மா.ஃபா பாண்டியராஜன் முயற்சியால் இது நடந்தது!' - நெகிழும் ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆர்வலர்கள் | tamil chair at harvard university was possible due to minister pandiarajan

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:48 (27/10/2017)

'மா.ஃபா பாண்டியராஜன் முயற்சியால் இது நடந்தது!' - நெகிழும் ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆர்வலர்கள்

'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசின் நிதி கிடைப்பதற்கு, அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன்தான் காரணம்' என நெகிழ்கின்றனர் ஹார்வர்டு தமிழ் இருக்கை ஆர்வலர்கள்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம்

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கை  அமைய வேண்டும் என்றால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு 40 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலரும் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதலாகத் தேவைப்பட்டது. இந்நிலையில், 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கைக்காக ஒதுக்குவதற்கு தமிழக அரசு இசைவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், 'ஹார்வர்டு இருக்கைக்கான நிதிச்சுமை ஓரளவு குறைந்துள்ளது' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்காகப் பாடுபட்டவர்களில் ஒருவரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரனிடம் பேசினோம். "கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நண்பர்களின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றேன். அப்போது தமிழ் இருக்கைக்காக தங்களுடைய சுய முயற்சியில் நிதி திரட்டி வரும் மருத்துவர்கள் திருஞானசம்பந்தன், ஜானகிராமன் ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்பதற்கான முதல் முயற்சியை எடுத்தவர்கள் இவர்கள் இருவரும்தான். தங்களது சொந்தப் பணத்திலிருந்து தலா 5 லட்சம் டாலர் கொடுத்து இருக்கை அமைவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனர். இந்த ஒரு மில்லியன் டாலர் தொகை போக வேண்டிய கூடுதல் தொகையைத் தமிழ் ஆர்வலர்கள் மூலம் சேகரித்து வந்தனர். சேலத்தைச் சேர்ந்த திரிவேணி குழுமத்தின் நிர்வாகிகள் ஒரு லட்சம் டாலர் நிதியை அளித்தனர். 

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காகத் தமிழக அரசு தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தும் எனத் தெரிவித்திருந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு, தமிழக அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றோம். தமிழக அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜனைத் தொடர்பு கொண்டோம். தமிழக அரசின் சார்பாக உதவி செய்வதாக உறுதியளித்து அதற்கான முயற்சிகளையும் எடுத்தார். தமிழக அரசின் பொருளாதாரச் சூழல்களை அறிந்தும், அவரது பெருமுயற்சியின் காரணமாகப் பத்துக் கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்துள்ளது. தமிழக அரசின் உதவியோடு கணக்கிட்டால், 30 கோடி ரூபாய் வரையில் சேர்ந்துள்ளது. இன்னும் பத்து கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அரசின் உதவி மூலம் ஹார்வர்டு இருக்கைக்கான நிதியைத் திரட்டுவதில் எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. தமிழின் பெருமை ஹார்வார்டு பல்கலைக்கழகம் மூலம் வெளிவரும்போது நமது செம்மொழிக்கு உலக அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்” என்றார் நெகிழ்ச்சியோடு.