கந்துவட்டிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விடாமல் இசக்கிமுத்து குடும்பத்தினரை சிறைப்பிடித்தது போலீஸ்! | Isakimuthu’s father and brother under police custody

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:10 (27/10/2017)

கந்துவட்டிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க விடாமல் இசக்கிமுத்து குடும்பத்தினரை சிறைப்பிடித்தது போலீஸ்!

கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராகவும் இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளிப்புக்குக் காரணமான அதிகாரிகளைக் கண்டித்தும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அனைத்துக் அட்சியினர் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவிருந்த இசக்கிமுத்து குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்துச்சென்று ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

 

இசக்கிமுத்து சகோதரர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கந்துவட்டிக் கொடுமை காரணமாக தீக்குளித்துத் தற்கொலை செய்தனர். மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை என்ற புகார் உள்ளது.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தி.மு.க மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. இந்த முற்றுகைப் போராட்டத்தில் உயிரிழந்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினரும் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். தே.மு.தி.க-வினர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

நெல்லை மாநகர மாவட்ட தே.மு.தி.க செயலாளரான முகமது அலி தலைமையில், ஏற்கெனவே அக்கட்சியினர் நெல்லை ஆட்சியரைச் சந்தித்து இசக்கிமுத்துவை மிரட்டிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர். அது தொடர்பான ஆடியோ ஆதாரத்தையும் அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்றைய முற்றுகைப் போராட்டத்தில் இசக்கிமுத்துவின் தந்தை பலவேசம், தாய் பேச்சியம்மாள், சகோதரர் கோபி ஆகியோரையும் அழைத்து வந்து போராட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்திருந்தனர். 

இதனை அறிந்து கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த இசக்கிமுத்துவின் தந்தை பலவேசம், சகோதரர் கோபி ஆகியோரை தனித்தனியே வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். அவர்களை எதற்காக அழைத்துச் சென்றார்கள்? என்பது பற்றி குடும்பத்தினரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர்கள் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள்? என்ற தகவலும் இல்லை. அதனால், இசக்கிமுத்துவின் தாய், சகோதரி ஆகியோர் பரிதவிப்பில் உள்ளனர்.