வீச்சரிவாளுடன் மோதிக்கொண்ட தி.மு.க-வினர்! அதிர்ந்த சேலம்

சேலம் தி.மு.க-வில் வீரபாண்டி ராஜாவுக்கும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் கடும் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. அது இன்று உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இரு தரப்பும் வீச்சு அரிவாளால் மாறி மாறி குத்திக்கொண்டு இரு தரப்பும் சேலம் அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, அங்கு சிகிச்சைபெறும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறார்கள்.


 

சேலம் 27 வது வார்டு அரிசிப்பாளையத்தில் ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் சேர்த்துக்கொண்டிருக்கும்போது ராஜா ஆதரவாளரான செல்வகணபதி தரப்பினரும் உறுப்பினர் படிவம் சேர்த்தபோது இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதில் ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் என்பவர்களும் டி.எம்.செல்வகணபதி தரப்பில் வினோத்குமார், வரதன் ஆகியோருக்கும் கத்திக் குத்துப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ராஜேந்திரன் தரப்பில் கத்திக் குத்துப்பட்டு அரசு மருத்துமனையில் இருக்கும் சுரேஷ், ''நான் 27 வது வார்டு துணைச் செயலாளராக இருக்கிறேன். நானும் எங்க வார்டைச் சேர்ந்த அவைத்தலைவர் ராமலிங்கம், பகுதிச் செயலாளர் பிரகாஷ் என நான்கைந்து பேர் எங்க வார்டு அரிசிப்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே உறுப்பினர் படிவம் சேர்த்துக்கொண்டிருந்தோம்.

அப்போது செல்வகணபதி, கிச்சிப்பாளையம் குணா, கொண்டலாம்பட்டி மோகன், தமிழ், மகமுத், அன்வர், அருள் ராம் என 40-க்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள். என் கையில் இருந்த படிவத்தைக் கேட்டாங்க. கொடுக்கவில்லை என்றதும் செல்வகணபதியும் மோகனும் அவர்களைப் பிடித்து வெட்டுங்கடான்னு சொன்னதும் வண்டியில் இருந்த ஆயுதத்தால் சரமரியாக வெட்டினார்கள். பிறகு, உருட்டுக் கட்டையால் அடித்தார்கள். அடி தாங்க முடியாமல் ஓடி வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் எங்களைக் கொலை செய்திருப்பார்கள்'' என்றார்.

செல்வகணபதி தரப்பில் கத்திக் குத்துப்பட்டு அரசு மருத்துமனையில் இருக்கும் வரதன், ''நாங்க மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனிடம் உறுப்பினர் படிவம் கேட்டால் கொடுப்பதில்லை. அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்குத்தான் படிவம் கொடுக்கிறார். அதையடுத்து இன்று அரிசிப்பாளையத்தில் உள்ள மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் தமிழ் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ராஜேந்திரன் ஆட்கள் எங்களை செல்போனில் வீடியோ எடுத்தார்கள். செல்வகணபதி எதற்காக எடுக்கறீங்கன்னு கேட்டதற்கு வயது வித்தியாசம் பார்க்காமல் கெட்ட வாத்தையில் திட்டினார்கள். திருப்பி நாங்கள் கேட்டதற்கு வீச்சு அரிவாளால் எங்களை வெட்டிவிட்டார்கள்'' என்றார்.

எது எப்படியோ தற்போது டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் குத்துப்பட்ட இரு தரப்பினரையும் சேர்த்துள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்துக்குப் புதிய தலைவலி உருவாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!