வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (27/10/2017)

கடைசி தொடர்பு:17:20 (27/10/2017)

அதிக வருமான ஈட்டும் மாநிலக் கட்சிகள் - முதல் இரண்டு இடங்களைப் பிடித்த தமிழகக் கட்சிகள்!

அதிக வருமானம் ஈட்டும் மாநிலக் கட்சிகள் பட்டியலில் தி.மு.க. முதலிடத்தையும், அ.தி.மு.க. இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2015-16-ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த ஆய்வறிக்கையை டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.77.63 கோடி வருமானம் பெற்று நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டிய மாநிலக் கட்சியாக தி.மு.க. முதலிடத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.54.93 கோடி வருமானத்துடன் இந்த பட்டியலில் அ.தி.மு.க. இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வருமானம் ரூ.15.97 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.கவின் வருமானம் ரூ.6.076 கோடி என்றும், தேமுதிகவின் வருமானம் ரூ.3.129 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. 

2015-16-ம் ஆண்டுக்கான நிதிநிலையை அளிக்க வேண்டிய காலக்கெடுவான 2016-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிக்கும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 47 மாநிலக் கட்சிகளில் மூன்றில் ஒருபங்கு கட்சியினரே நிதிநிலை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். முதல் கட்சியாக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி கடந்த 2016 ஜூன் 11-ம் தேதியும், கடைசி கட்சியாக அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதியும் நிதிநிலை குறித்த அறிக்கையை அளித்துள்ளனர். மேலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி, லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், உமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தங்கள் நிதிநிலை அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் இதுவரை அளிக்கவில்லை என்றும் ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.