'என் வீட்டு முன்பும் பேனர் இருக்கிறது' - அரசு வக்கீலைக் கடிந்துகொண்ட நீதிபதி  | I have seen banners in front of home, chennai high court judge says to advocate

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (27/10/2017)

கடைசி தொடர்பு:18:28 (27/10/2017)

'என் வீட்டு முன்பும் பேனர் இருக்கிறது' - அரசு வக்கீலைக் கடிந்துகொண்ட நீதிபதி 

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

சாலைகளில் வைக்கப்படும் பேனர்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்றும், இதனால் சாலைகளில் பேனர் வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷனா குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என்று தடை விதித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறினர். அப்போது நீதிபதிகளில் ஒருவர், என் வீட்டுக்கு முன்பு வைக்கப்பட்ட பேனர்கூட இன்னும் அகற்றப்படாமல் உள்ளது என்று அரசு வழக்கறிஞரைக் கடிந்துகொண்டார்.

மேலும் நீதிபதிகள், நாங்கள் வசிக்கும் பகுதியில் பல நிறுவனங்கள், என்.ஜி.ஓ-க்கள் வைத்த பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் பேனர்கள் அகற்றப்பட்டாலும் புதிதாக பேனர் வைப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கேள்விகள் எழுப்பினர்.