எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவுக்கு முதல்வரிடம் சிவகங்கை மக்கள் எதிர்பார்க்கும் பரிசு என்ன தெரியுமா....

 

                                 

 கட்டடம் சொல்லும் வரலாறு!

சிவகங்கையில் அடுத்த மாதம் டாக்டர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மன்னர் துரை சிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்காக அங்குள்ள பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடிட்டோரியம் மற்றும் கலையரங்கம் போன்ற கட்டடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதனையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மு.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி அந்தக் கட்டடங்களை இடிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

இந்தக் கட்டடம் சொல்லும் வரலாறு என்ன என்பதை தமிழாசிரியர் இளங்கோவிடம் பேசினோம். "இந்தக் கல்லூரிக்குள் இருக்கும் விளையாட்டு அரங்கம் மன்னர் துரை சிங்கம் காலத்தில் 1937-ம் ஆண்டு சுந்தரம் என்கிற பொறியாளரால் கட்டப்பட்டது. மன்னர் நினைத்திருந்தால் அவர் பெயரையோ, அவருடைய அப்பா பெயரையோ வைத்திருக்கலாம். ஆனால், மன்னர் அந்த அரங்கத்தைக் கட்டிய பொறியாளர் சுந்தரம் பெயரை அதற்குச் சூட்டினார்.

இன்றைய தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தான். இவர்களுக்கு இந்தக் கட்டடங்களின் தொன்மை வரலாறு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில், சேவுகன் செட்டி என்ற ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் இருந்தார். அவரின் சாதனையை இன்றைக்கும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சேவுகன் செட்டி புகைப்படம் இருக்கிறது.கால்பந்தாட்ட வீரர் ஆதப்பன் சிறந்த சாதனையாளர். பன்னீர்செல்வம்,பாரதி,மாணிக்கம் போன்றவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள். இவர்களை உருவாக்கியவர் அப்போது இருந்த உடற்கல்வி இயக்குநர் வேலாயுதம். இவ்வளவு பெருமை இந்த விளையாட்டு அரங்கத்துக்கு இருந்தாலும், அதே பெருமை ஆடிட்டோரியத்துக்கும் உண்டு என்பதற்குச் சில உதாரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர்.

  

"இந்த அரங்கம் 1947-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கே நுண்கலை விழா, பாரதி விழா, பட்டமளிப்பு விழா எனப் பல விழாக்கள் நடைபெறும். இந்தக் கல்லூரியின் வெள்ளி விழாவைக் கவிஞர் மீரா, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், இலக்கியப் பேச்சாளர்கள் எல்லாரையும் அழைத்துவந்து பேசவைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கிராஃபைட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக் கலைகளின் பேராசிரியராக இருந்த குணசேகரன் அடையாளம் காணப்பட்டது இந்த மேடைதான். கம்பர் விழா, கண்ணதாசன் விழா போன்ற இலக்கிய விழாக்கள் நடத்துவதற்கு இந்த ஊரில் இடமில்லை. இந்தக் கட்டடங்களைப் பராமரிப்பு செய்து அரசாங்கம் கொடுத்தால், மாணவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும். தொடர்ந்து பராமரிப்பு செய்தால், இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். இந்த அரங்கில் பேசும்போது பேச்சுகள் எதிரொலிக்காது. அந்த அளவுக்குக் கட்டடக் கலையின் தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

சிவகங்கை நகர் தி.மு.க செயலாளர் துரை.ஆனந்த் பேசும்போது, ''வரலாற்றுச் சின்னங்களை அழித்துவிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தச் சொன்னாரா முதல்வர்? அமைச்சர் பாஸ்கரன், எம்.பி. செந்தில்நாதன் ஆகியோர் அந்தக் கட்டடங்களை இடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது, ஏனென்று தெரியவில்லை. 1997 - 98-ம் ஆண்டு இந்த ஆடிட்டோரியம்  மராமத்து செய்யப்பட்டு அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த விழா நல்லபடியாக நடக்கட்டும். ஆனால், தொன்மையான கட்டடங்கள் இடிக்கப்படக் கூடாது. இந்த விழாவில், இக்கட்டடங்களைப் புனரமைப்பு செய்ய முதல்வர் நிதி அறிவிக்க வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளாக அமைந்துள்ளது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!