“கரணம் தப்பினால் மரணம்தான் எங்க பொழப்பு!” - லாலாபேட்டை வாழை வியாபாரிகளின் ‘சோக’ சாகசம் | Banana sellers in Lalapet explaining their tough life

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (28/10/2017)

கடைசி தொடர்பு:09:59 (28/10/2017)

“கரணம் தப்பினால் மரணம்தான் எங்க பொழப்பு!” - லாலாபேட்டை வாழை வியாபாரிகளின் ‘சோக’ சாகசம்

“ஒரு பை வாழைப்பழம் வித்தா, மூணு ரூபாய் கமிஷன் கிடைக்கும். அந்த மூணு ரூபாயைச் சம்பாதிக்க, பைபாஸ்ல ரெண்டு நிமிஷம் நின்னு போற பஸ்ல ஏறி, உள்ளே இருக்கிற பயணிகள்கிட்ட வித்துட்டு, ஓடுற பஸ்ல தரையில் குதிச்சு இறங்குகிறோம். ஒவ்வொரு தடவையும் அப்படிக் குதிக்கிறப்ப உசுரு போய் உசுரு வரும். அப்படிக் குதிக்கும்போது நாலைந்து பேர் அடிப்பட்டு செத்துப்போயிருக்காங்க. பலருக்கு கால் உடைஞ்சுபோயிருக்கு. என்ன பண்றது... வயிறுன்னு ஒண்ணைத் தந்து, அதுல பசின்னு ஒரு உணர்வைக் கொடுத்திருக்கானே ஆண்டவன்” என்று அதக்கியபடி பேசுகிறார்கள் லாலாபேட்டை பைபாஸில் ஓடும் பஸ்களில் வாழைப்பழம் விற்பனை செய்பவர்கள். 

வாழை வியாபாரம்

கரூர் டு திருச்சி சாலை மார்க்கமாக ஒரு தடவையேனும் நீங்கள் சென்றிருந்தால், இந்த வாழைப்பழம் விற்கும் வியாபாரிகளின் ஏறி, இறங்கல் சாகசத்தைப் பார்த்திருக்கலாம். தேசிய நெடுஞ்சாலை... கூடவே பைபாஸ் என்பதால் கரூர் மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டையில் பேருந்துகள் இரண்டு நிமிடம் மட்டுமே நின்று போகும். அந்தக் குறுகிய நேரத்தில், ஐம்பது ஆண்களும் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களும், `வாழைப்பழம் பை இருபது ரூபா சார். ரஸ்தாளி, பூவம் பழம், கற்பூரவள்ளி பழம் சார். காவிரி தண்ணியில விளைஞ்ச பழம். தேவாமிர்தமா இருக்கும்' என்ற டயலாக்கை உதிர்த்தபடி பேருந்தை சூழ்வார்கள். பெண்கள் கீழே நின்றபடி ஜன்னல் வழியாக, `யாவாரம்' பண்ண, ஆண்கள் பட்டாளம்தான் ஸ்பைடர்மேன் சாகசத்தைக் கையில் எடுக்கும்.

இளந்தாரிகளும், நடுத்தர வயதினரும் பேருந்துக்கு நான்கு பேர் வீதம், பேருந்து நின்ற நொடியில் ஏறி, உள்ளே பஸ் முழுக்க வியாபாரம் பார்த்து, காசு வாங்கி சில்லறை கொடுத்து நிமிர்வதற்குள் பஸ் கிளம்பிச் சற்று வேகமெடுக்கும். அசராத அவர்கள் வாசல்படி வந்து தரையில் குதித்து பேலன்ஸ் பண்ணி பெருமூச்சுவிடுவார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேருந்திலும் ஒரு பை விற்றாலே பெரிது. சமயத்தில் அதுவும் கிட்டாது. அப்படி அவர்கள் விற்கும் ஒவ்வொரு பைக்கும், வாழைப்பழ வியாபாரிகள் மூன்று ரூபாய் கமிஷன் தருவார்கள்.  எத்தனை பைகள் விற்கிறார்களோ அந்த எண்ணிக்கையை மூன்றால் பெருக்கினால் அதுதான் அன்று அவர்களுக்கு வருமானம். கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக நடக்கிறது இந்தத் தொழில். 

 வாழை வியாபாரம்

‘அந்தர்பல்டி' அடித்து ஒரு பேருந்தில் வியாபாரத்தை முடித்து கீழே குதித்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய இளங்கோவனிடம் பேசினோம்.
“நாய் பொழப்பு, பேய் பொழப்பு வேற தொழில்ல உள்ளவங்க தங்களோட தொழிலை பற்றி அலுத்துக்குவாங்க. எங்க தொழில் அதுக்கும்மேல. எனக்குச் சொந்த ஊர் பக்கத்துல உள்ள பிள்ளாப்பாளையம். நான் 14 வருஷமா இங்கே பழம் விக்கிறேன். என் வருமானத்தை நம்பிதான் வீட்டுல அம்மா, அப்பா, மனைவி, புள்ளைங்கன்னு பல பேரோட வயித்துப்பாடு இருக்கு. ஆரம்பத்துல இந்த பஸ்ல சூதானமா ஏறி இறங்குற சூட்சுமம் எனக்குப் பிடிபடலை. பல தடவை கீழே விழுந்து பலமா அடிபட்டிருக்கு. அப்பெல்லாம், `இந்த வேலையே வேண்டாம்டா சாமி'ன்னு தோணும். ஆனால், குடும்பநிலை அடுத்த கணமே என்னை சடார்ன்னு எழுந்து, வாழைப்பழப் பைகளோட அடுத்த பஸ்ல தாவி ஏறவைக்கும். ஆண்டவன் புண்ணியத்துல பெரிய விபத்து எதுவும் நடக்கலை. இந்த பைபாஸையொட்டி காவிரி ஓடுவதாலும் இந்தப் பகுதியில் வண்டல்மண் இருப்பதாலும், வாழை தாட்டியமாத்தான் விளையும். லாலாபேட்டையைச் சுற்றி 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் முந்நூறு ஏக்கர்களில் காலம்காலமாக வாழை விவசாயம்தான். இங்கே விளையுற பூவம்பழம், ரஸ்தாளி, பச்சை நாடன், கற்பூரவள்ளிப் பழங்கள் தமிழ்நாடு அளவுல பிரசித்தி. ஆனா, அதை விற்கிற எங்க பொழப்புதான் ஸ்பைடர்மேன் மாதிரி பஸ்ஸுக்கு பஸ்ஸு தாவவேண்டியதா இருக்கு.

வாழை வியாபாரம்

வாரத்துல ஞாயிறு மற்றும் வியாழக்கிழமையில இங்கே வாழைத்தார் சந்தை நடக்கும். பசையுள்ள வியாபாரிகள் அந்தச் சந்தையில் வேண்டுமட்டும் வாழைத்தார்கள் ஏலத்தில் வாங்கிவிடுவார்கள். அவற்றைச் சீப்புச் சீப்பாக வெட்டி, இரண்டு சீப்புகள் ஒரு பை, இருபது ரூபாய் விலை என நிர்ணயித்து, அதைதான் எங்களிடம் வாரம் முழுக்கத் தருவார்கள். ஒரு பை விற்றுத் தந்தால், எங்களுக்கு மூன்று ரூபாய் கமிஷன் கிடைக்கும். நாள் முழுக்க வித்தாலும் 150 ரூபாய் தாண்டாது. பொங்கல், ஆயுதபூஜைன்னு விசேஷ நாள்கள்ல மட்டும் நாங்கள் ஒவ்வொருத்தரும் தினமும் முந்நூறு ரூபாய் வரை சம்பாதிப்போம். பஸ்ல ஏறி இறங்கி வியாபாரம் பார்க்கிறதுல ரிஸ்க்குகள்தான் அதிகம். வேகமாப் போற பஸ்ல வியாபாரம் முடிச்சுட்டு குதிக்கிறதுக்குள்ள பஸ் எடுத்துடுவாங்க. விழுந்து அடிபட வாய்ப்பிருக்கு. அடுத்து, அவசரத்துல வியாபாரம் பண்ணும்போது கிழிஞ்சப் பணத்தைத் தருவாங்க. இன்னும் பலர் பர்ஸுக்குள் பணத்தைத் தேடுறதுக்குள்ள பஸ் எடுத்துடுவாங்க. `நீங்க இறங்குங்க. ஜன்னல் வழியா பணத்தை வீசுறேன்'னு சொல்வாங்க. நம்பி இறங்குவோம். ஆனா, பணத்தைக் கொடுக்காம  ஏமாத்திட்டுப் போயிடுவாங்க. கீழே நின்னு வியாபாரம் பார்க்கும்போது, நாங்க கஸ்டமர் வாழைப்பழம் வாங்கிட்டு கொடுத்த காசுக்கு மீதி சில்லறை தர்றதுக்குள்ள பஸ் கிளம்பிடும். இப்படி ரெண்டு பக்கமும் நஷ்டம் வந்தாலும், அதிக நஷ்டமும் கஷ்டமும் எங்களுக்குதான்" என்றார் வேதனை பொங்க.

வாழை வியாபாரி“எனக்கும் சொந்த ஊர் பிள்ளாப்பாளையம்தான். ‘வடிவேலு ஒரு படத்துல, `ரிஸ்க்கு எடுக்கிறது எனக்கு ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி'ன்னு சொல்வார். அவர் காமெடிக்குச் சொன்னது எங்க வாழ்க்கையில சீரியஸா நடக்குது. இப்படி பஸ்ல ஏறி இறங்கி வியாபாரம் பார்த்த நாலைந்து பேர் பஸ் டயர்ல மாட்டி செத்துப்போயிருக்காங்க. அதுல பன்னிரண்டு வயசு சிறுவன் ஒருத்தன், மூதாட்டி ஒருவரும் அடக்கம். பலருக்கு உசுரு தப்பினாலும்,  கை கால் போயிருக்கு.

இருபது வருஷங்களுக்கு முன்பு லாலாபேட்டை ஊருக்குள் பஸ்கள் வந்து நின்னு போகும். சாவகாசமா வியாபாரம் பார்ப்போம். ஆனால், அதன் பிறகு பைபாஸ் ஆக்கினதுக்கு அப்புறம்தான். பேருந்துகள் பத்து நிமிடம் நின்னு போகுது. அதற்குள் நாங்க வியாபாரம் முடிச்சாகணும். அதான் இப்படி சாகசம் பண்ணி பொழப்பைப் பார்க்கவேண்டியிருக்கு. பஸ்ஸைத் தவிர்த்து, கார், வேன்ல வர்ற பயணிங்க வாகனங்களை நிறுத்திப் பழம் வாங்குவாங்க. அந்த மாதிரி கஸ்டமர்கள்கிட்ட ஆண்கள் நாங்க வியாபாரம் பார்க்க மாட்டோம். பெண்களையும், வயசானவங்களையும் வியாபாரம் பார்க்கச் சொல்வோம்.  இப்படி பஸ்ல ஏறி இறங்கி வியாபாரம் பார்க்க தயாராக இருந்தாலும், வருஷத்துல அடைமழைக் காலம் ரெண்டு மாசம், காத்து, வறட்சியில சரியாக வாழை விளையாத சூழல்னு எங்க பொழப்புக்கு வேட்டுவைக்கும் காலமும் உண்டு. அப்போ, மாத்துத் தொழில் தேடிப்பார்த்து, வருமானம் பார்க்க முடியாம எங்க குடும்பங்கள் சோத்துக்கே அல்லாடும். அப்போ வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கிட்டு காலம் தள்ளுவோம்" என்றார் கல்யாணசுந்தரம்.வாழை வியாபாரி

கீழே நின்றபடி, “வாழைப்பழம்... வாழைப்பழம். பை இருபது ரூபா...” என்று நின்ற பேருந்தில் சவுண்டு விட்டும், ஒரு பயணியும் ஏறெடுத்துப் பார்க்காத சோகத்தை சேலை தலைப்பை நெற்றியில் ஒட்டியெடுத்த விநாடியில் கடந்த கலா என்கிற பெண்மணியிடம் பேசினோம்.

“எங்க பொழப்பு எதிரிக்கும் வரக்கூடாது சார். இப்படி நாங்க வியாபாரம் பார்க்கிற இந்த இடத்துல மர நிழல்கூட கிடையாது. இங்கே சாலை ஓரமா கீத்துல கொட்டகை போட்டு அதுல நின்னுக்கிட்டு, பஸ்கள் வரும்போது மட்டும் போய் வியாபாரம் பார்த்தோம். இன்னும் சிலர் சாலை ஓரங்களில் கொட்டகை போட்டு, அதில் உட்கார்ந்து கார், வேன், பைக்குகளில் வரும் பயணிகளிடம் வியாபாரம் பார்த்தார்கள். ஆனா, பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து, `யாரைக் கேட்டு கொட்டகை போட்டீங்க?'ன்னு அத்தனை கொட்டகைகளையும் பிடுங்கி எறிஞ்சுட்டாங்க. ஆனால், காவிரியில விதிமுறைகளை மீறி சாலைகள் போட்டு மணல் அள்ளி கோடிகோடியா சம்பாதிக்கிறவங்களை அவங்க தட்டிக்கேட்கலை. நூறும் இருநூறும் சம்பாதிக்கிற எங்களை பொழப்பை நடத்தவிடாம கொட்டகையைப் பிரிச்சுட்டாங்க. வாழைப்பழம் மட்டும் வித்தா வருமானம் பத்தாதுன்னு புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை போய் பலாப்பழம் வாங்கி வந்து, அதையும் விற்கிறோம். கூடவே, பூக்களும் விற்கிறோம். எங்களுக்குச் சாலையோரங்களில் அங்கங்கே கொட்டகை போட்டு பழ வியாபாரம்பண்ண வழி பண்ணுங்க'னு மாவட்ட ஆட்சித்தலைவர்கிட்ட கோரிக்கை வெச்சிருக்கோம். பார்க்கலாம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்