வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/10/2017)

கடைசி தொடர்பு:20:15 (27/10/2017)

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குருபூஜை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி பேட்டி

தேவர் குருபூஜையை முன்னிட்டு 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகளை அடையாளம் காணும் வகையில் சிறப்புக் கருவிகள் அமைக்க இருப்பதாகவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் தேவரின் 110 வது ஜெயந்தி விழா மற்றும் 55 வது குருபூஜை விழா இம்மாதம் 28, 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளன. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, 'தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் உட்பட 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. மாவட்டம் முழுவதும் 261 கிராமங்களில் டி.எஸ்.பி-க்கள் அளவில் கூட்டங்கள் நடத்தி தேவர் குருபூஜை நிகழ்வின்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை எடுத்துக் கூறியிருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடும் 533 பேர் இனம் காணப்பட்டு இவர்களில் 357 பேருக்கு பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் 249 பேருக்கு கடந்த 3 மாதங்களில் அவர்களது நடவடிக்கைகள் பற்றி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 11 ஆம்புலன்ஸ்கள், 10 மீட்பு வாகனங்கள், 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 9 மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் சார்பில் 50 நடமாடும் நான்கு சக்கர வாகனங்கள், 42 இரு சக்கர வாகனங்கள், 65 அதிவிரைவுப்படை வீரர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அனைத்திலும் இரவு, பகலாக ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.

தடை செய்யப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சமுதாயத் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்புப் போடப்படும்.18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 8 சோதனைச்சாவடிகள் போக்குவரத்துத்துறை அலுவலர்களைக் கொண்டு வாகன சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பசும்பொன் கிராமத்தில் மட்டும் 7 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பைனாகுலர் மற்றும் ரகசிய கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படும்.வரும் 29-ம் தேதி பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்காக 150-ம், 30-ம் தேதி 140-ம் ஆக மொத்தம் 290 அரசுப் பேருந்துகள், தேவைப்படும் கிராமங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.

மேலும், பசும்பொன்னிலும், கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களிலும் தென்தமிழகத்க்ச் சேர்ந்த ரவுடிகளை அடையாளம் காணும் கருவி முதல் முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்கென சென்னையில் பயிற்சி பெற்ற குழுவினர் பசும்பொன் வந்துள்ளனர். ஏற்கெனவே கணினியில் பொருத்தப்பட்ட இக்கருவி தென்தமிழகத்தின் ரவுடிகள் கூட்டத்தோடு கலந்து வரும்போது அவர்களை உடனடியாக அடையாளம் காட்டும் வகையில் பீப் ஒலி எழுப்பும். இதைத் தொடர்ந்து அவர்களை உடனடியாகப் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் மொத்தம் 300 ரகசிய கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடந்துவருகிறது' என்று தெரிவித்தார்.