வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (27/10/2017)

கடைசி தொடர்பு:20:30 (27/10/2017)

’நெல்லை ஆட்சியர், எஸ்.பி மீது நடவடிக்கை’ - முதலமைச்சருக்கு மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் நான்கு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வர், தன் வழக்காக எடுத்து, அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய ஹென்றிதிபேன், 'கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, குறை கேட்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார்மனு கொடுத்துள்ளார். ஆனால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஆகியோரின் அலட்சியப்போக்கால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த இசக்கிமுத்து, தன் மனைவி மற்றும் இரு பச்சிளம் பெண்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 

தமிழக முதல்வர்
     

இதற்கு முக்கியக் காரணமாகத் திகழும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், அச்சன்புதூர் காவல்நிலைய அதிகாரிகள் ஆகியோர் மீது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது. எங்களுக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, மக்கள் குறை கேட்கும் நாளில் கந்துவட்டிக் கொடுமை குறித்து இசக்கிமுத்து, மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை புகார் மனுக்கள் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அதை அப்படியே மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அதை அப்படியே சம்பந்தப்பட்ட அச்சன்புதூர் காவல்நிலையத்தில் அனுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் அக்கறையற்றப் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த 2 அதிகாரிகளின் அலட்சியப் போக்கை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கையைத் துவக்க வேண்டும் என  வலியுறுத்துகிறோம். கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த இசக்கிமுத்துவுக்காக போலீசார் நியாயமாகச் செயல்படாமல், கடனைத் திருப்பி அளிக்குமாறு, அவரை மிரட்டி, திட்டி, அவமானப்படுத்தியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் இதேமாதிரி நடந்துகொள்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதை தன் வழக்காக எடுத்து, இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மனித உரிமையை ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையில் 15 முழுநேர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மாவட்டக் குழந்தைகள் நல குழுமம் மற்றும் இளஞ்சிறார் நீதிச்சட்டம் உள்ளது. கிராமம்தோறும் அரசுசாரா அமைப்புகளின் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், அரசு அங்கீகாரம் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் என இத்தனை இருந்தும் ஒருவரால்கூட இசக்கிமுத்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதிமுடிவாக இதற்கான தீர்வைக் காண பொதுச் சமூகத்திடம் வலியுறுத்துகிறோம்' என்றார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க