’பத்துநாளைக்கு ரூ.40,000 வட்டி’ - கந்துவட்டியால் வீட்டை இழந்த சேலம் தம்பதி! | Salem man files complaint against usury

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (27/10/2017)

கடைசி தொடர்பு:21:00 (27/10/2017)

’பத்துநாளைக்கு ரூ.40,000 வட்டி’ - கந்துவட்டியால் வீட்டை இழந்த சேலம் தம்பதி!

கந்து வட்டிக் கொடுமையால நெல்லையில் தீக்குளித்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் கந்து வட்டியின் கொடூரம் வெளி வந்துகொண்டிருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி அசலைவிட 7 மடங்கு அதிகம் வட்டி கட்டியும் இன்னும் அசல் கட்டவில்லை என்று கூறி மிரட்டி வீட்டை எழுதி வாங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  

இதுகுறித்து புகார் அளித்துள்ள கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட கோபி கூறுகையில், 'என் மனைவி பெயர் கவிதா. எங்களுக்கு இரண்டு பசங்க இருக்கிறார்கள். நாங்கள் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குடியிருக்கிறோம். நான் தனியார் பெட்ரோல் பங்க்-கில் கேஸியராக வேலை பார்க்கிறேன். பழைய சூரமங்கலம் பகுதியில் வீடு கட்டினேன். ஃபினிஷிங் செலவுக்கு பணம் பற்றாமல் போனதால், ஜங்ஷன்  பகுதியைச் சேர்ந்த மீட்டர் வட்டி சகோதரர்களான எபி, டேவிட் ஆகியோரிடம் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினேன்.

அதற்கு வட்டியாக பத்து நாள்களில் ரூ.40,000 கொடுக்க வேண்டும். வீடு கட்டி முடித்ததும் வாடகைக்கு விட்டுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கினேன். ஆனால், 10 நாள்களுக்கு ஒரு முறை ரூ.40,000 கொடுத்ததால் வீட்டு வேலை சரியாக முடிக்க முடியவில்லை. வட்டி கட்டுவதற்காக மீண்டும் அவர்களிடமே ஒரு லட்சம், ரெண்டு லட்சம் என்று வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டேன். இதுநாள் வரை வட்டி மட்டுமே 30 லட்ச ரூபாய்க்கும் மேல் கட்டி இருக்கிறேன். மேலும், 40 லட்ச ரூபாய் மதிப்புடைய வீட்டையும் அவர்களுக்கே எழுதிக் கொடுத்துவிட்டேன். மீண்டும் 6 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மீட்டர் வட்டி சகோதரர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். தற்போது வீடு, வாசல் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். கல்லூரி சென்றுகொண்டிருந்த என்னுடைய பசங்க நான் படும் கஷ்டங்களைப் பார்த்து கல்லூரிக்கு போகாமல் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் வாங்கிய பணத்துக்கு முறையாக வட்டிப் பணத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டைத் திருப்பித் தர அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் இறந்ததைப்போல நான் தற்கொலை செய்துகொண்டு சாவதைத் தவிர வேறு வழி இல்லை'' என்று கண்ணீருடன் பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க