வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (27/10/2017)

கடைசி தொடர்பு:21:30 (27/10/2017)

முடிவுக்கு வந்த இழுபறி; தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம்!

வங்கியில் உள்ள தங்கக் கவசத்தைப் பெறுவதில் அ.தி.மு.க-வின் இரு பிரிவினரிடையே எழுந்த இழுபறி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.

 

 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தங்கக் கவசத்தினை ஜெயலலிதா வழங்கினார். 13 கிலோ எடை கொண்ட இந்தத் தங்கக் கவசம் குருபூஜையின் போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். மற்ற நாள்களில்  தங்கக் கவசம் மதுரையில் அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் பெட்டகத்தில் அ.தி.மு.க-வின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமதி அம்மாள் ஆகியோர் பெயர்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இழுபறிக்கு பின் அணிவிக்கப்பட்ட தங்க கவசம்
 

இந்த ஆண்டுக்கான குருபூஜை நாளை தொடங்க உள்ள நிலையில் வங்கியின் பொறுப்பில் உள்ள தங்கக் கவசத்தைப் பெறுவதற்காக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமதி அம்மாள் உள்ளிட்டோர் இன்று காலை மதுரை அண்ணா நகர் வங்கிக் கிளைக்கு வந்திருந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் தங்கக் கவசத்தைத் தருவதற்கு தினகரன் அணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கவசத்தைப் பெறுவதில் இழுபறி ஏற்பட்டதுடன்,  ஓ.பி.எஸ்-தினகரன் அணிகளிடையே மோதல் உண்டாகும் நிலை உருவானது. 

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முன்வந்தது. ஆனால், இதற்கு மூன்று தரப்பினரும் சம்மதித்துக் கடிதம் தர நிபந்தனை விதிக்கப்பட்டது. தினகரன், காந்திமதி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்குத் தாமதமாகச் சம்மதித்தனர். அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வங்கி நிர்வாகத்தினர் தங்கக் கவசத்தை ஒப்படைத்தனர்.

அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கக் கவசம் அங்கு ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், மாவட்ட ஆட்சியர்கள் நடராஜன், வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் தேவரின் சிலைக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக தேவர் சிலைக்குத் தங்க கவசம் அணிவிப்பதில் நிலவி வந்த இழுபறி இதன் மூலம் முடிவுக்கு வந்தது.