’குடும்பத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்’: சரணடைந்த முன்னாள் மாவோயிஸ்ட் கோரிக்கை

மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தவரும், போலீஸாரால் தேடப்பட்டு வந்தவருமான ஊத்தங்கரை பகத்சிங், சேலம் எஸ்.பி. ராஜன் முன்னிலையில் சரணடைந்தார். 

இதுபற்றி பகத்சிங்கிடம் பேசிய போது, ’எங்க அப்பா பேரு பாலன், அம்மா பேரு வாசகி. எங்களுடைய சொந்த ஊர் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை. அப்பா ஆரம்ப காலத்தில் இருந்தே மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் மூலமாக நானும் மாவோயிஸ்ட் அமைப்பில் சேர்ந்தேன். கடந்த 2002-ம் ஆண்டில் ஊத்தங்கரை மலைப்பகுதியில் மாவோயிஸ்ட் வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி எங்களைக் கைது செய்தார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிவா என்கின்ற பார்த்திபன் மரணமடைந்தார். அதையடுத்து நாங்கள் 26 பேர் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். சம்பவம் நடந்த போது எனக்கு வயது 17. மைனர் என்பதால் பொடா வழக்கு எனக்குச் செல்லாது. சிறார் சீர்திருத்தச் சட்டம்தான் செல்லும் என்று தீர்ப்பளித்தார்கள். அதையடுத்து சேலம் சிறார் சீர்திருத்த நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டுவரை ஆஜராகி வழக்கை முறையாக நடத்தி வந்தேன்.

காவல்துறை எனக்கு தொடந்து தொந்தரவு செய்து வந்ததை அடுத்து, தலைமறைவாகி பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தேன். இந்நிலையில் கியூ பிரிவு போலீஸார் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் பல விதங்களில் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். கிருஷ்ணகிரி கியூ பிரிவு போலீஸார், என்னை என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருந்தது எனக்குத் தெரியவந்தது. என்னுடைய வழக்கறிஞர் ஹரிபாபு மூலம் சேலம் எஸ்.பி.,யிடம் சரண் அடைந்திருக்கிறேன். தற்போது எனக்கு வந்து 32 ஆகிறது. அப்பா, அம்மாவிற்கு வயதாகி விட்டது. அவர்களைக் கவனித்துக் கொள்ளுவதற்கு யாரும் இல்லாததால் காவல்துறை என்னைக் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!