வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (28/10/2017)

கடைசி தொடர்பு:00:40 (28/10/2017)

கசக்கும் தை பொங்கல்; ரேஷன் கடைகளில் சர்க்கரையின் விலை இரு மடங்காக உயர்வு!

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரையின் விலையை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள், மானிய விலையில் வழங்கபட்டு வருகிறது. இதில் அரிசி இலவசமாகவும் சர்க்கரை, பருப்பு, உழுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் மானிய விலையிலும் வழங்கபட்டு வருகிறது. 
இந்நிலையில் மத்திய அரசு அந்தியோதனா அன்னயோஜனா திட்டதின் கீழ் வருபவர்களுக்கு மட்டுமே சர்க்கரைக்கான மானியம் வழங்கி வருகிறது. இதனால் மாநில அரசின் செலவு அதிகரித்தது. வெளி சந்தையில் சர்க்கரையின் விலையும் அதிகரித்துள்ளதால் அரசின் கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அந்தியோதனா அன்னயோஜனா திட்டதின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தவிர்த்து மற்ற சாதரண குடும்ப அட்டைகாரர்களுக்கு சர்க்கரை விலையை 13 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அந்தியோதனா அன்னயோஜனா திட்டதில் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏற்கெனவே வழங்கபட்ட அதே  ரூ 13.50  -ல் தொடர்ந்து சர்க்கரை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வரும் நவம்பர் மாதம், முதல் அமலுக்கு வரும். இந்த விலை உயர்வுக்கு பிறகும் ரேஷன் கடையில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை, வெளி சந்தை விலையை விட ரூ 20 குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகைக்கு இரண்டு மாதத்துக்கு முன்னால் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.