சிறப்பான வாஸ்து நாள் இன்று! | Excellent vasthu day today

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (28/10/2017)

கடைசி தொடர்பு:05:54 (28/10/2017)

சிறப்பான வாஸ்து நாள் இன்று!

நாம் வாழும் இடம் எப்படி அமைய வேண்டும், அங்கு காற்றும் வெளிச்சமும் எந்த அளவுக்கு நுழைந்து சூழ்நிலை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சொல்வது தான் வாஸ்து சாஸ்திரம். இது தமிழில் மனையடி சாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. பஞ்ச பூதங்களும் ஒருங்கிணைந்து ஒரு நிலத்தை வளமிக்கதாக மாற்றி அங்கு வாழும் உயிர்களை ஆசிர்வதிப்பதை எடுத்து சொல்வதே வாஸ்து. சூரியனை அடிப்படையாக கொண்ட இந்த வாஸ்து சாஸ்திரத்தின் நாயகன் வாஸ்து பகவான். ஆண்டின் எல்லா நாட்களும் உறங்கியபடி இருக்கும் இந்த வாஸ்து பகவான், எட்டு நாட்கள் மட்டுமே விழித்து இருந்து வாஸ்து நாள் என அருளாசி செய்வார். இந்த எட்டு நாட்களே வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. அந்த நாளில் தொடங்கப்படும் எந்த கட்டிட வேலைகளும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

வாஸ்து நாள்

சித்திரை 10-ம் தேதி, வைகாசி 21-ம் தேதி, ஆடி 11-ம் தேதி, ஆவணி 6-ம் தேதி, ஐப்பசி 11-ம் தேதி, கார்த்திகை 8-ம் தேதி, தை 12-ம் தேதி, மாசி 22-ம் தேதி ஆகிய இந்த எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. அதன்படி இன்று (28-10-17) வாஸ்து நாளாகும் . காலை 7.44 முதல் 8.20 வரையிலான நேரம் வாஸ்து பூஜைகள் செய்ய நல்ல நேரம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே அன்பர்கள் இந்த நேரத்தில் வாஸ்து பகவானை மகிழ்விக்கும் விதமாக பூஜைகளை செய்யலாம். புதிய அல்லது மறுசீரமைப்பு கட்டிட வேலைகளை தொடங்கலாம்.