வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (28/10/2017)

கடைசி தொடர்பு:12:00 (28/10/2017)

ஆராட்டு விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஐந்து மணி நேரம் விமானங்கள் ரத்து!

108 திவ்விய தேசங்களில் ஒன்றும், பரசுராம க்ஷேத்திரம் என்றும் போற்றப்படும் கேரளத்தின் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழும் திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலில், ஐப்பசி மாதம் நடைபெறும் திருவிழா கடந்த 19- ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவில், இறுதி நாளான இன்று ஆராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்கள் கலந்துகொண்டனர்.

விமானங்கள்


இந்த விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை என, 5 மணி நேரம் மூடப்படுவதாக, திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குநர் ஜார்ஜ் தாரகன் கூறியுள்ளார்.

விமானங்கள் தாமதமாவதால், குறிப்பிட்ட நேரத்துக்குத் தாம் செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லமுடியவில்லை என்று வெளி மற்றும் உள் மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் வருத்தத்தில் உள்ளனர். 

மேலும், ஆராட்டு விழா ஊர்வலம் பாரம்பர்ய முறைப்படி, விமானநிலையத்தின் வழியாகச் சென்று இறுதியாகக் கடற்கரையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.