வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (28/10/2017)

கடைசி தொடர்பு:12:50 (28/10/2017)

‘எவ்வளவு பணம் வச்சிருக்கே?’ - வடைச் சுட்டு விற்கும் மூதாட்டியை மிரட்டிய கந்துவட்டிக் கும்பல்!

ஆட்சியர் அலுவலகம் - கந்துவட்டி

நெல்லையில் கந்துவட்டிக் கும்பல் தன்னை மிரட்டுவதாகவும் காவல்துறையினர் கந்துவட்டி கொடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், உடையார் மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனிக் குடித்தனம் சென்று விட்ட நிலையில், 70 வயது நிரம்பிய சுப்பம்மாள், வடை, சம்சா, பஜ்ஜி போன்றவற்றை தயாரித்து தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறார். கணவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக அவசரமாகப் பணம் தேவைப்பட்டதால், அதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாள் என்பவரிடம் 15,000 கடன் பெற்றிருக்கிறார். 

கடன் கொடுக்கும்போதே ரூ.4000 பிடித்தம் செய்து கொண்டு ரூ.11,000 மட்டுமே கையில் கொடுத்துள்ளார். அதனை சுப்பம்மாள் தினமும் ரூ.150 வீதம் 100 நாள்கள் கட்ட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். அதன்படி பணத்தைத் திருப்பிச் செலுத்திய நிலையில், கூடுதலாக 10 தினங்களுக்குப் பணம் கொடுக்குமாறு நிர்பந்தம் செய்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அவர் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் வட்டிக்குப் பணம் கொடுத்த பொன்னம்மாள் கடுமையான வார்த்தைகளில் பேசி அடிக்க வந்திருக்கிறார். 

கந்துவட்டி - சுப்பம்மாள்

இதனால், அச்சமடைந்த சுப்பம்மாள் தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்துடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த அதே 23-ம் தேதி இரு தரப்பையும் அழைத்து விசாரித்த தாழையூத்து பெண் சப்-இன்ஸ்பெக்டர், கந்துவட்டி கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார். பொன்னம்மாவை மிரட்டும் வகையில் அவரை அங்குள்ள அறையில் பூட்டி வைத்துள்ளார்.

பின்னர், அவரை அழைத்து, ‘எவ்வளவு பணம் வச்சிருக்கே?’ எனக் கேட்டிருக்கிறார். சுப்பம்மாள் தன்னிடம் ரூ.5000 மட்டுமே இருப்பதாகவும், அதைக் கொண்டு வியாபாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பறித்துக்கொண்ட அந்த அதிகாரி, ’மாதம் ரூ.3000 வீதம் அடுத்த 5 மாதத்துக்குப் பணத்தைக் கொடுத்து கடனை முடித்து விடுவேன்’ என எழுதி வாங்கியிருக்கிறார். தொடர்ந்து தான் ஏமாற்றப்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுப்பம்மாள், இது பற்றி நெல்லை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.