Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அங்கு நடந்த சம்பவம் வேதனையாக இருக்கிறது!’ - சொல்கிறார் தீபா கணவர் மாதவன் #VikatanExclusive

தீபா, மாதவன்

Chennai: 

தீபா வீட்டில் நடந்த சம்பவங்கள் எனக்கு மனவேதனையாக இருக்கிறது என்று மாதவன் தெரிவித்தார். 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் குதித்தார். தீபாவுக்குப் பக்கபலமாக அவரது கணவர் மாதவன் செயல்பட்டுவந்தார். இந்தச் சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனியாக அரசியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா சென்ற சமயத்தில் மாதவனும் அங்கு சென்றார். அங்கு தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே நடந்த களேபரம், போலீஸ் நிலையம் வரை விசாரணைக்குச் சென்றது.

அதன்பிறகு தீபாவுடன் இணைந்து மாதவன் அரசியலில் ஈடுபட்டுவந்தார். தற்போது, தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே பிரச்னை எரிமலையாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ராஜாமீது மாதவன் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் ஏற்பு சான்றிதழை (சி.எஸ்.ஆர்) போலீஸார் கொடுக்காமல் பல மணிநேரம் இழுத்தடித்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்குப்பிறகு இரவு 10.45 மணியளவில் ராஜாமீது போலீஸார், எப்.ஐ.ஆர். பதிவுசெய்துள்ளனர். 

தீபா வீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக மாதவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 ராஜாமீது ஏன் போலீஸில் புகார் கொடுத்தீர்கள்?  

“தீபா அழைத்ததின்பேரில் தி.நகர் வீட்டுக்குச் சென்றேன். அரியலூர், திருச்சி ஆகிய இடங்களுக்குத் தீபாவும் நானும் சென்ற சமயத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தீபாவுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தேன். இந்தச் சமயத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மீட்டிங் நடந்தது. மீட்டிங் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பே ராஜாவால் என்னுடைய செக்யூரிட்டிகளுக்குப் பிரச்னை ஏற்பட்டது. குடியாத்தம் கூட்டத்துக்கு ராஜா வந்திருந்தார். சென்னை வந்தபிறகு வீட்டில் வேலை செய்தவர்களில் சிலரை ராஜா மிரட்டியதாக எனக்குத் தகவல் வந்தது. நான் அமைதியாக இருந்தேன். கடந்த 26-ம் தேதி இரவு வீட்டில் நான் இருந்தபோது ராஜா, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தேன். உடனடியாக போலீஸார் அங்கு வந்து விசாரித்தனர்.

பிறகு, மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். அதன்படி மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் சென்று புகார் கொடுத்தேன். ஆனால், புகார் ஏற்புச் சான்றிதழை (சி.எஸ்.ஆர்) அங்குள்ள போலீஸார் என்னிடம் வழங்காமல் இழுத்தடித்தனர். மாலை 3 மணிவரை அங்கேயே காத்திருந்தேன். அப்போது, மாலை 5 மணிக்கு வரும்படி போலீஸார் தெரிவித்தனர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றபோது சி.எஸ்.ஆர். நகல் வழங்கப்படவில்லை. அதன்பிறகே மீடியாவிடம் தகவலைத் தெரிவித்தேன். அதன்பிறகு இரவு 10.45 மணியளவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டு அதை என்னிடம் கொடுத்தனர்". 

மாதவன்

 நீங்கள் கொடுத்த புகாரில் உண்மையில்லை என்று தீபா போலீஸ் நிலையத்தில் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளதே?

 “நான் கூறிய புகார் உண்மையில்லை என்று தீபா சொன்னால், போயஸ் கார்டன் வீட்டு வாசலில் மீடியா, பொது மக்கள், போலீஸார் முன்னிலையில் ராஜா என்னை மிரட்டியது உண்மையில்லையா, அதுமட்டுமல்லாமல் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்க முயற்சி செய்ததும் உண்மையில்லையா. வீட்டில் நடந்த சம்பவங்களை வெளியில் கொண்டு வந்தால் நல்லா இருக்காது என்று அமைதியாக இருந்தேன். உயிரே போகும்போது புகார்கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? மனதில் 100 டன் வெயிட் வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. வாழ்வதைவிட சாவதே மேல் என்ற நிலைமையில் இருக்கிறேன்".

மிரட்டல் சம்பவத்துக்குப்பிறகு ராஜாவை தீபா எச்சரித்தாரா?

 "மேடம் (தீபா) முன்னிலையில் என்னை அவர் மிரட்டவில்லை. உண்மையிலேயே போலீஸ் நிலையத்தில் தீபா அப்படிச் சொன்னாரா. இல்லை மிரட்டிச் சொல்ல வைக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை" 

இனி உங்களது அரசியல் பயணம் எப்படியிருக்கும்?

"நான் தொடங்கியிருப்பது கட்சி. தீபா தொடங்கியது பேரவை. இதனால், அவை இரண்டும் தனித்தனியாகச் செயல்படும் என்று ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளேன். ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு குமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்குள் தீபா, என்னை வீட்டுக்குள் அழைத்ததால் அங்குச் சென்றேன். இதனால் நடைப்பயணம் தள்ளிப்போனது. இதற்கிடையில், தமிழக அரசும் விசாரணைக் கமிஷனை அறிவித்துவிட்டது. தீபாவுடன் இணைந்து பணியாற்றியபோது சிறப்பாகச் செயல்பட்டேன். அந்த வளர்ச்சி சிலருக்குப் பிடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறேன்"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement