தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு பயந்து அகற்றப்பட்டதா நூற்றாண்டு விழா பேனர்கள்?

தேனி மாவட்டத்தில் வரும் நவம்பர் 5ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெறவிருக்கிறது. அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கடந்த மாதமே தொடங்கிவிட்டது மாவட்ட நிர்வாகம். பல ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பிரம்மாண்ட மேடை, விரிந்த பார்வையாளர்கள் பகுதி என எல்லாவற்றிலுமே பிரம்மாண்டத்தோடு நடைபெற்றுவருகிறது நூற்றாண்டுவிழா ஏற்பாடுகள். அதன் ஒரு பகுதியாக, எடப்பாடி-பன்னீர் படங்கள் தாங்கிய பதாகைகள், பன்னீர் ஆதரவாளர்களால் தேனி முழுவதும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. 

இந்நிலையில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட் மற்றும் பேனர்கள் அமைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் கட்சி பேனர்கள், கட்-அவுட்கள் அகற்றப்பட்ட போதும், தேனியில் சாலையோரம் பேனர்கள் மிளிர்ந்துகொண்டிருந்தன. நேற்று உறவினர் ஒருவரின் வீட்டு விஷேசத்திற்காக தேனி வந்திருந்த தங்கத்தமிழ்ச்செல்வன், சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேனர்களைப் பார்த்துக் கோபமடைந்ததாகவும், நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் மாவட்ட கலெக்டரைச் சந்தித்து பேனர் தொடர்பாக முறையிடப்போவதாகவும் தகவல் கசிந்தது.

இதனை அறிந்த பன்னீர் தரப்பு, அவசர அவசரமாக, பெரியகுளம் சாலையிலிருந்து விழா நடக்கும் போடி விலக்கு வரை வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். நிகழ்ச்சி முடிந்து வந்த தங்கத்தமிழ்ச்செல்வனின் கண்களுக்கு ஒரு பேனர் கூட சிக்காததால், அப்படியே மதுரை புறப்பட்டுச்சென்றார். `அண்ணன், கலெக்டரிடம் போய் பேசப்போகிறார் என்று பயந்துதான் இவர்கள் பேனர்களைக் கழட்டியிருக்கிறார்கள்…` என்று தங்கத்தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர் ஒருவர் தெரிவிக்கிறார். எது எப்படியே, பேனர்களால் ஏற்பட்ட சாலைப் போக்குவரத்து நெரிசல் இனி இருக்காது எனப் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!