ஜெயலலிதா மரணம்: மர்மத்தை விலக்குமா நீதி விசாரணை?

ஜெயலலிதா மரணம்

சென்னை எழிலகத்தில் உள்ள கலச மகால் முதல் மாடியில் உள்ள அந்த அறை, பல உண்மைகளைப் பேசும் முக்கிய அறையாக வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறது. அந்த அறைக்கு வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி, அறையின் தன்மையை ஆய்வு செய்தார். பிறகு, ‘‘ஓகே. அக்டோபர் 30-ம் தேதியில் இருந்து நீதி விசாரணை ஸ்டார்ட்’’ என்கிறார்.

எதற்காக இந்த நீதி விசாரணை?

செப்டம்பர் 22-ம் தேதி இரவு சென்னை போயஸ் கார்டனிலிருந்து சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ் வண்டி அப்போலோ மருத்துவமனையை அடைகிறது. ‘நீர்ச்சத்து குறைபாடு’ என்ற காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. விவரமறிந்த அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் மருத்துவமனை முன்பு குவிகின்றனர். அன்றிலிருந்து 75 நாள்களும் ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சைகள், அவர் உடல்நிலை குறித்தெல்லாம் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் சொல்லும் கருத்துகளின் மூலமே ஒட்டுமொத்த மக்களும் அறிந்துவந்தனர். சரியாக  டிசம்பர் 5-ம் தேதி, சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா மறைந்தார்  என அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. ‘அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சில நாள்களில் தனி அணியாக பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் அதே குற்றச்சாட்டை எழுப்பினார். சசிகலா மீது சந்தேகங்களைத் திருப்பினார். அப்போது சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார்.

காலச்சக்கரம் மிக வேகமாகவே சுழல, அணிகள் இடம் மாறின. ஓ.பன்னீர்செல்வமும் - எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இரண்டு அணிகளும் ஒன்றாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்க, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இந்த இணைப்புக்கு முக்கியக் காரணமாக இருந்த, ‘ஜெயலலிதா மரணம்குறித்து நீதி விசாரணை வேண்டும்’ என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிறைவேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க நீதி விசாரணை அமைக்கப்படும்’ என்று ஆகஸ்ட் 17-ம் தேதி தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்காகச் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமியை விசாரணை ஆணையத்தின் தலைவராகச் செப்டம்பர் 25-ம் தேதி நியமித்தார். விசாரணையின்போது, உள்ளே பேசும் உரையாடல் வெளியே கேட்க முடியாத அளவுக்கான கட்டமைப்போடு சென்னை எழிலகத்தில் உருவாக்கப்பட்டது, அதன் அறை. அந்த அறையை அக்டோபர் 27-ம் தேதி வந்து பார்வையிட்டார் நீதிபதி அ.ஆறுமுகசாமி.

நீதிபதி அ.ஆறுமுகசாமி நீதி விசாரணை

 

நீதிபதி அ.ஆறுமுகசாமி நீதி விசாரணை

கோப்புகளில் கையெழுத்திட்ட நீதிபதி, “வெளிப்படையான விசாரணை நடக்கும்” என்றார், குழுமியிருந்த செய்தியாளர்களிடம். அதன்பிறகு  அதிகாரபூர்வமாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மறைந்த நாள்வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்புடையவர்களும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கலாம். சத்திய பிரமாண உறுதிமொழி பத்திரப்படிவில் (1+2 நகல்களுடன்) தகுந்த ஆவணங்களுடன் நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், முதல் தளம், கலச மகால் புராதனக் கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்திடம், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை குறித்தும் நிலைமை குறித்தும் அறிந்தவர்களும் விசாரணை ஆணையத்தின் முன் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர் சரஸ்வதிஇந்த நிலையில் சசிகலா தரப்புக்கு எதிராகத்தான் இந்த விசாரணை ஆணையமே நியமிக்கப்பட்டுள்ளது என்ற கருத்துகள் பரவலாக, இதுகுறித்து விளக்கமறிய சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி சி.ஆர்.சரஸ்வதியைத் தொடர்புகொண்டு, “இந்த நீதி விசாரணை ஆணையத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்” என்றோம்.

“எந்த விசாரணை குறித்தும் அச்சமில்லை. எங்கள் டி.டி.வி.தினகரனே, ‘ஜெயலலிதா சிகிச்சை குறித்து சி.பி.ஐ விசாரிக்கட்டும். அப்போதுதான் எங்களுக்கு எதிராக எழுப்பப்படும் தவறான கருத்துகளுக்கு விடை கிடைக்கும்’ என்றார். எங்கள் பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவர். உலகளவில் பிரபலமான மருத்துவர்கள் கொண்டு ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு சிகிச்சையளித்தது. அப்போது பிரதமர் அலுவலகத்துக்குத் தினமும் சிகிச்சைகுறித்து ரிப்போர்ட் அனுப்பியவர் யார் தெரியுமா? 

மர்ம மரணம் புகார் எழுப்பும் இப்போதைய துணை முதல்வரும், அப்போதைய முதல்வராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான். சிகிச்சையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அப்போதே பிரதமரிடம் இவர் தெரிவித்திருக்கலாமே... அப்போதே இதே புகாரை எழுப்பியிருக்கலாமே? எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை வேண்டும்’ என்று கேட்டபோது, ‘சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’ என்றாரே ஒ.பன்னீர்செல்வம். அப்போதெல்லாம் இந்த சந்தேகங்கள் அவருக்கு இல்லையா? பதவிக்காக ஏதேதோ அவதூறுகளை வீசுகிறார்.

அம்மாவை மீட்க 75 நாள்களும் போராடினோம். எங்களுக்கு எல்லாமே ஜெயலலிதாதான். அவரை மீட்க எங்கள் சின்னம்மா சசிகலா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்” என்றவரிடம், “விசாரணை ஆணையம் முன்பு நீங்கள் விளக்கமளிப்பீர்களா” என்றோம். “என்னை அழைத்தால் நிச்சயம் நடந்ததைச் சொல்வேன்” என்றார் அழுத்தமான குரலில்.

அடுத்து நாம் விசாரணைக் குழுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மதுசூதனனிடம் பேசினோம். அவர், “நீதிபதியின் விசாரணையில் உள்ளதால் நான் எதுவும் பேச இயலாது” எனத் தெரிவித்தார்.

“ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை குழுவினர், எய்ம்ஸ் மருத்துவர்கள், அமைச்சர்கள் என ஒருவர் விடாமல் அனைவருமே விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இறுதியாக விசாரணை முடிவில் நீதிபதி அ.ஆறுமுகசாமி கொடுக்கும் அறிக்கை நாடு தழுவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்கின்றனர், இதுபோன்ற விசாரணை ஆணையம்குறித்து அறிந்த ஆர்வலர்கள். 

அதேநேரம், ஒரு மாதம் தாமதமாகத் தொடங்கப்படும் விசாரணை ஆணையத்தால், குறிப்பிட்ட டிசம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இயலுமா? என்றும் தெரியவில்லை என்ற கருத்தும் சுழன்றடிக்கிறது. 

“சசிகலா தரப்பு, குறிப்பாகக் கட்சித் தொண்டர்களிடம் டி.டி.வி-க்குப் பெருகும் ஆதரவை இந்த விசாரணை ஆணையத்தின் மூலம் முறியடிக்கலாம். அதன்மூலம் அவருக்கு மோசமான இமேஜை உருவாக்க முடியும் எனக் கருதுகிறது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் தரப்பு. அதேநேரம், “மடியில் கனமில்லை... அதனால், வழியில் பயமில்லை என்றரீதியில் உள்ளது சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பு” என்கின்றனர் சில மூத்த அ.தி.மு.க நிர்வாகிகள்.

தினகரன் எடப்பாடி பழனிசாமி ஒ.பன்னீர்செல்வம்

தினகரன் - எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

‘முழுமை என்பது மரணம் மட்டுமே' என்பார் ஓஷோ. ஆனால், அதுவும் நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பொருந்த முடியாத அளவுக்கு அவர் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் விலகாமல் இருக்கின்றன. 'ஜெயலலிதா, போயஸ் கார்டனிலிருந்து அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால், வருகிற அக்டோபர் 30-ம் தேதியில் தொடங்கும் விசாரணை, போயஸ் கார்டனில் இருந்து தொடங்கப்படும்’ என விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மர்மங்கள் புதைந்த இடத்திலிருந்தே திரை விலக்கும் விசாரணையும் தொடங்குகிறதோ?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!