’இந்தியைத் திணிக்கவே நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுகின்றன‘ – பெ.மணியரசன் காட்டம் | Navodaya schools are being brought in to tamilnadu for impose Hindi - P.Maniyarasan

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/10/2017)

கடைசி தொடர்பு:20:20 (28/10/2017)

’இந்தியைத் திணிக்கவே நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுகின்றன‘ – பெ.மணியரசன் காட்டம்

மறைமுகமாக இந்தியைத் திணிக்கப்பதற்காகவே நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுகின்றன என்று தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். 

மறைமுகமாக இந்தியைத் திணிக்கப்பதற்காகவே நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுகிறது என்கிறார் பெ.மணியரசன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருச்சியில் ‘தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தார்” எனும் புத்தகத்தை மணியரசன் வெளியிட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொருளாளர் ஆனந்தன் பெற்றுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பெ.மணியரசன், ’தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளில் அனைத்திந்திய தேர்வு என்பது மோசடியாக நடக்கிறது. இதற்கு சான்றாக  அஞ்சல்துறை பணிக்காக நடத்தப்பட்ட தேர்வில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்  25/25 மதிப்பெண் பெற்றது சர்ச்சையாகி, அந்தத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுப் பணிகளில், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு 90 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், 10 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ள வெளிமாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 31-ம் தேதி பாரத மிகுமின் நிலையத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டம் தொடங்குகிறது. அதே நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான  வரித்துறை தலைமை அலுவலகத்திலும் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

மேலும், நவோதயா பள்ளிகள் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் வருவதையும், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி கொண்டுவருவதையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டிப்பதாகக் கூறிய பெ.மணியரசன், இந்தியைத் திணிக்க மறைமுகமாக நவோதயா பள்ளி கொண்டுவரப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.