வெளியிடப்பட்ட நேரம்: 04:10 (29/10/2017)

கடைசி தொடர்பு:04:10 (29/10/2017)

மதுரையில் மீண்டும் தலையெடுக்கும் கொள்ளை; ஒரே நாளில் 91 பவுன் நகை கொள்ளை!

மதுரையில் நூதன முறையில் பல இடங்களில் கொள்ளை செய்யப்பட்டு வந்த நிலையில்,  காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் நகை கொள்ளை சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில் மதுரை பழையநத்தம் சாலையில் ஒய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முகம் என்பவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து 64 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளகயடித்து சென்றனர். சண்முகம் தல்லாகுளம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இந்நிலையில் இந்த செய்தி பரவுவதற்கு முன் மதுரை கலை நகர் பகுதியில் வசிக்கும் ஞானசேகரன் என்பவரது வீட்டின் முன்புற கதவை உடைத்து, பீரோவில் இருந்து 27 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் காவல்துறையிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார்களின் அடிப்படையில்  தல்லாகுளம் காவல்துறையினரும்,  கூடல்புதூர் காவல் நிலையத்தினரும்  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் மொத்தம் 91 பவுன் நகை கொள்ளையால் மதுரை பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் நகையை கொள்ளையடித்த நபர்களை விரைவாக காவல்துறை கைது செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.