பக்கவாதம் ஆபத்தை சொல்லும் உலக ப‌க்கவாத ‌தினம் இன்று | World stroke day today

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:32 (30/10/2017)

பக்கவாதம் ஆபத்தை சொல்லும் உலக ப‌க்கவாத ‌தினம் இன்று

மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் இது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்பார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவின்றி போய்விடுகிறது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையற்ற கொழுப்பு பொருள்கள் உடலில் தேங்குவது போன்றவை தான் பக்கவாதம் வர துணை புரிகிறது.  

மரபுரீதியாக கூட இந்த பக்கவாத நோய் அதிகம் உண்டாகிறது என்கிறார்கள். ஒவ்வொரு ஆறு விநாடிக்கும் ஒருவரை தாக்கும் இந்த நோய் ஆண்டுக்கு சுமார் ஆறு கோடி பேரை வீழ்த்துகிறதாம். அதில்  ஒன்றரை கோடி பேர் மரணமும் அடைந்துவிடுகிறார்களாம். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 6 லட்சம் பேர் வரை பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒன்றரை லட்சம் பேர் வரை பலியாகிறார்கள் என்கிறது மருத்துவ உலகம். 

பக்கவாதம்

தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், பேச்சுக்குழறல் போன்றவை இந்த நோய் தாக்குவதைக் காட்டும் உடனடி அறிகுறியாகும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்தல், உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல், புகை, மது ஒழித்தல் போன்றவை இந்த நோயை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும், இதய நாள நோய், சர்க்கரை குறைபாடு கொண்டவர்களைப் பக்கவாதம் தாக்கும் ஆபத்து அதிகம். எனவே, இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பக்கவாதத்தை ஒழிக்கவென்றே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29-ம் நாளை  உலக ப‌க்கவாத ‌தினம் என்று எல்லா நாடுகளும் அனுஷ்டித்து வருகின்றன. அதன்படி பக்கவாதம்குறித்த விழிப்பு உணர்வை எல்லோரும் பெற்று நலம் பெற இன்றைய நாள் ஏதுவாக உதவுகிறது.