சிறுமிக்குத் தொல்லைகொடுத்த தலைமை ஆசிரியர்: கைதுசெய்த காவல்துறை | Headmaster arrested for sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (29/10/2017)

கடைசி தொடர்பு:10:47 (30/10/2017)

சிறுமிக்குத் தொல்லைகொடுத்த தலைமை ஆசிரியர்: கைதுசெய்த காவல்துறை

ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். 

        

அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர், ஜான் அலெக்ஸ். இப்பள்ளியில், ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி, தனது வீட்டில் பெற்றோரிடம் தனக்கு உடல் நலமில்லை என்பதை மழலையில் கூறி அழுதுள்ளார். 

பெற்றோர்கள், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது, குழந்தை தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார். பின்னர், மருத்துவர்கள் மூலமாக அச்சிறுமி படித்துவந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த கொடுமைகள் வெளிவந்தன. 

அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருமானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியர் ஜான் அலெக்ஸை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 5-ம் வகுப்பு பள்ளிச் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியரே பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.