’தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்க உள்ளது’: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

’தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்க உள்ளது’ என திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
வெல்லமண்டி நடராஜன்
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அரசு சுற்றுலா மாளிகையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 
அங்கு பேசிய  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. 
 
கடந்த செப்டம்பர் 19-ம் தேதி, டி.டி.வி தினகரன் தலைமையில், நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு, திருச்சியிலிருந்து கூட்டம் வரவில்லை. தற்போது, திருச்சியில் இருவர்தான் டி.டி.வி அணியில் இருக்கிறார்கள். அவர்கள் பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்களை அழைத்தபோதும் யாரும் வராததால், அண்டை மாவட்டங்களிலிருந்து கூட்டத்தை அழைத்திருந்தார்கள்.
 
அதில் கலந்துகொண்டவர்களுக்கு 500 ரூபாயும் குவாட்டரும் கொடுத்தே அந்தக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, திருச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறிப்பிட்டதுபோல, மற்ற 21 மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சியில்தான் மிக அதிகமான கூட்டம் கூடியிருந்தது. அந்த அளவுக்கு இயக்கமும் ஒற்றுமையாக உள்ளது, ஆட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் கொடுத்த அறிவுரைகளின்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைத்த அனைத்து பேனர்களையும் 24 மணி நேரத்தில் அகற்றிவிட்டோம்.
 
நேற்று, 46-வது அ.தி.மு.க துவக்க விழா-வை முன்னிட்டு, டி.டி.வி தினகரன் அணியினர் சிறிய கூட்டத்தை திருச்சியில் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்கு வேன்களில் ஆட்களைக் கூட்டிவந்து கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் பெயரை அவர்களது நோட்டீஸில் போட்டுள்ளார்கள். இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெயரைப் போட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்குப் பதவியும் அளித்துள்ளனர். இதுபோன்ற மலிவான அரசியலை டி.டி.வி அணியினர் நிகழ்த்துகின்றனர். தொண்டர்கள் பலம் இல்லாத நிலையில், இதுபோன்று பெயர் போட்டுகொண்டு கூட்டம் கூட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். எவ்வித அங்கீகாரமே இல்லாத, சின்னமே இல்லாத டி.டி.வி தினகரன், எங்கள் அணியினருக்குப் பதவிகொடுப்பதற்கு யார்?
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் ஆலோசித்த பிறகுதான் திருச்சியின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொட்டப்பட்டில் அமைக்கப்படும் என இடத்தை அறிவித்துள்ளார். தற்போது, அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் கருத்துகளைக் கேட்டு, மீண்டும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளிவரும். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்துப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. எங்கள் கட்சி ஒன்றுபட்டுவிட்டது. நாங்கள்தான் அ.தி.மு.க என்று  நிரூபித்துவிட்டோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்க உள்ளது. இரட்டை இலை சின்னத்தை நாங்கள்தான் பெறுவோம். அடுத்தகட்ட தேர்தலுக்குத் தயாராக உள்ளோம். இந்நிலையில், நாங்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றி குறை கூற வேண்டும். 
 
சுற்றுலாத்துறை அற்புதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. முக்கொம்புக்கும் கல்லணைக்கும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரத்தொடங்கியுள்ளனர். எடப்பாடி அரசில், 96 அடி வரை தண்ணீர் இருக்கிறது. 140 வருடங்களுக்குப் பின், 100 அடியை தண்ணீர் நிலை எட்டுவதை எடப்பாடி அரசே நிகழ்த்திக்காட்டியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் குறைகள் இருக்கும். அவற்றை உடனடியாக சீரமைத்துவிடுவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!