வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/10/2017)

கடைசி தொடர்பு:13:10 (30/10/2017)

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?”- பி.ஜே.பி- மீது பாயும் திருமாவளவன்!

திருமாவளவன்

பி.ஜே.பி. - விடுதலைச்சிறுத்தைகள் இடையேயான மோதல் உச்சக்கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பி.ஜே.பி-யினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் கடும் வாக்குவாதத்திலும், மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது மட்டும் தமிழகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்க்கும்போது தமிழகத்தில் ஆளும்கட்சி அ.தி.மு.க-வா அல்லது பி.ஜே.பி.-யா என்ற சந்தேகம் ஏற்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஆட்சிக்கு வர இயலாத நிலையிலேயே பி.ஜே.பி. இப்படி செயல்பட்டால், ஒருவேளை அக்கட்சி ஆட்சிக்குவந்தால் அவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்று கடும் விமர்சனத்தை பி.ஜே.பிக்கு எதிராக அவர் வைத்துள்ளார்.

 

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'மெர்சல்'திரைப்படத்தில், மைய அரசின் ஜி.௭ஸ்.டி. வரிவிதிப்பை விமர்சிக்கும் வசனங்கள் ஓரிரு காட்சிகளில் இடம்பெற்றிருப்பதாக பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். அதுதொடர்பாக, என்னிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விடையளிக்கும்போது, "நடிகர் விஜய் படத்தில் வரும் ஜி.எஸ்.டி. குறித்த விமர்சனத்தில் வருத்தப்படும் அளவுக்கு ஏதுமில்லை; தணிக்கைத் துறையினர் அந்தப் படத்தை ஆய்வுசெய்த பின்னர்தான் திரையிட அனுமதி அளித்துள்ளனர்; எனவே, அப்படத்தில் ஆட்சேபனைக்குரிய வசனங்களிருப்பின், பி.ஜே.பி-யினர் தணிக்கைத் துறையினரைத்தானே கண்டிக்க வேண்டும்? மாறாக, நடிகர் விஜயைக் கண்டிப்பது ஏன்? ஒருவேளை, அந்தப்படத்தை வெற்றிபெற வைப்பதற்காகவும், விஜயை பி.ஜே.பி. ஆதரவாளராக வளைத்துப் போடுவதற்காகவும் இவ்வாறு பேசுகிறார்களோ என கருதுகிறேன் என்று நான் கருத்துக் கூறினேன். இதற்குப் பதிலளித்த தமிழிசை, அரசியல் சார்ந்து கருத்துக் கூறாமல், மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, அரசியல் நாகரிக வரம்புகளை மீறி, 'தனிநபர் விமர்சனங்களைக்' கொட்டித் தீர்த்தார். 'கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர், நில அபகரிப்பு செய்கிறவர்' என்றெல்லாம் எனக்கு எதிராக வார்த்தைகளை வாரி இறைத்தார்.

அவரின் கருத்து அபாண்டமான அவதூறு; அவருடைய மனசாட்சிக்கே அது தெரியும் என்று அதற்கு நான் பதிலளித்திருந்தேன். தமிழிசையின் கருத்தை யாரும் பொருட்படுத்த வேண்டாமென்றும் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். எனினும், தமிழிசை செளந்தரராஜனின் விமர்சனத்துக்கு, ஒருசில பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கும்நிலை உருவானது. 

 

அந்தவகையில், கரூரில் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டபோது அவர்களைக் காவல்துறையினர் வழிமறித்துக் கைதுசெய்தனர். அவர்களைக் காவல்துறையின் வண்டியில் அமர வைத்துள்ளபோதே, பி.ஜே.பி-யினர் 50-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு, காவல்துறையினர் முன்னிலையிலேயே உருட்டுக்கட்டைகளால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைத் தாக்கினர். 

 

தமிழிசைசௌந்திரராஜன்

ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றாகும். அத்தகைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. அவர்கள்மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியது பி.ஜே.பி. வன்முறைக் கும்பல். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள்தான் வன்முறையில் ஈடுபட்டதாக அபாண்டமாக அவதூறு பரப்புகின்றனர். 

இந்நிலையில், காவல்துறையினரோ எங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை மட்டும் பொய் வழக்கில் சிறையில் அடைத்தனர். ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்களின்மீது வழக்கேதும் பதிவுசெய்யவில்லை. இதேபோல், மயிலாடுதுறையிலும் பி.ஜே.பி. வன்முறைக்கும்பல், இதேபோன்றதொரு வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. தமிழிசைக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட முயன்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். காவல்துறையினர் முன்பே அவர்களை பி.ஜே.பி-யினர் தாக்கியுள்ளார்கள். போலீஸாரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யே ஆளுங்கட்சி போல அடாவடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், தமிழகக் காவல்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது பி.ஜே.பி. அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை சாதிய, மதவாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். தமிழகத்தில் அவர்கள் வேரூன்றிவிடக் கூடாது என்று திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து நின்று போராடி வருகிறோம். இதனால் எரிச்சலடைந்து விடுதலைச் சிறுத்தைகள் மீது பி.ஜே.பி-யினர் பாய்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சிக்கு வர இயலாத நிலையிலேயே இவர்கள் இப்படியென்றால், ஆட்சிக்கு வரும் சூழலிருந்தால் அல்லது ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் இவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்யவே அதிர்ச்சியாக உள்ளது. 

இதுபோன்ற சாதிய, மதவாத சக்திகளின் ஜனநாயக விரோத அடாவடிப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், தமிழகத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் நவம்பர் 3-ம் தேதியன்று, மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக அமைப்பினரும் கலந்துகொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பி.ஜே.பி-க்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் திராவிடக் கட்சிகளையும் அணி திரட்டும் முடிவுக்கு திருமாவளவன் வந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆர்பாட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும் திட்டத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்