`இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் திரைப்படம் வந்தால் எதிர்ப்போம்!' - அர்ஜுன் சம்பத்

 நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய ஜி.எஸ்.டி வசனங்களை நீக்க, நாகர்கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் மெர்சல் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்கு முன்பு, மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் போலீஸார் அந்தக் கட்சியைச் சேர்ந்த 19 பேரை கைதுசெய்தனர். போராட்டம்குறித்து அர்ஜுன் சம்பத் பேசும்போது, `மெர்சல்' படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இது, தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. ஜனநாயக அறநெறி சார்ந்தது. விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படம் வெளியானபோது, அதில் இஸ்லாமியருக்கு எதிரான கருத்துகள் இருக்கின்றன என்ற சர்ச்சை எழுந்தது. உடனே இஸ்லாமியர்களைச் சந்தித்துப் பேசி சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்கினார்கள்.

அதுபோல, மெர்சல் திரைப்படத்திலும் சர்சைக்குரிய வசனங்கள் இருக்கின்றன என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இதுவரை அந்த வசனங்களை நீக்கவில்லை. இதனால் படம் வெளியாகி 10 நாள்கள் கடந்த நிலையில் போராட்டம் நடத்துகிறோம். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கின்றவர்கள், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். இந்து உணர்வைப் புண்படுத்தும் வகையில் எந்தத் திரைப்படம் வந்தாலும் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்' என்று அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!