கறுப்புப் பணம் பதுக்கினால் வழங்கப்படும் சிங்கப்பூர் புகழ் 'பிரம்படி' எப்படி இருக்கும்? | Caning punishment in Singapore

வெளியிடப்பட்ட நேரம்: 02:05 (30/10/2017)

கடைசி தொடர்பு:07:54 (30/10/2017)

கறுப்புப் பணம் பதுக்கினால் வழங்கப்படும் சிங்கப்பூர் புகழ் 'பிரம்படி' எப்படி இருக்கும்?

'மெர்சல்' படத்தில் சிங்கப்பூர் பற்றி விஜய் வசனம் பேசினாலும் பேசினார்... யாரைப் பார்த்தாலும் சிங்கப்பூர் சிங்கப்பூர்தான் என்று சொல்கிறார்கள். சிங்கப்பூர், ஆசியாவின் செலவு பிடிக்கும் நாடுகளில் ஒன்று. சட்டதிட்டங்கள் கடுமையானவை. லஞ்சம் கொடுத்தெ ல்லாம் தப்பித்துவிட முடியாது. சின்ன தவறுக்குக்கூட, மறக்க முடியாத அளவுக்குத் தண்டனை அளிக்கும் நாடு. 

பிரம்படி

இன்னொருவருக்குத் தெரியாமல் அவரின் வைஃபையைப் பயன்படுத்தினால்கூட சிங்கப்பூர் இணையச் சட்டப்படி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 10 ஆயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். புறாக்களுக்கு உணவிட்டால், 500 டாலர் அபராதம். தன்பாலின உறவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை. பொதுக்கழிவறையைப் பயன்படுத்திவிட்டு ஃப்ளஷ் செய்யாமல் சென்றால், தண்டனைக்குரிய குற்றம். Urine Detection Devices (UDD) கருவி பொருத்தப்பட்டிருப்பதால், தப்பிக்க முடியாது. கழிவறைக் கதவு தானாகவே மூடிக்கொள்ளும். போலீஸ் வந்தால்தான் திறக்க முடியும். மக்களிடையே தன்னளவில் சுத்தம் தேவை என்பதற்காக இந்த ஏற்பாடு. 

சிங்கப்பூரில், பொது இடத்தில் வைத்தோ, வாகனங்களிலோ சிகரெட் பிடிப்பது குற்றம். சிகரெட் பாக்கெட்டுடன் நாட்டுக்குள் நுழைவதும் குற்றம். சிகரெட் பட்ஸ் போன்ற குப்பைகளைத் தெருவில் வீசினால், முதல்முறை 300 டாலர் அபராதம் விதிக்கப்படும். மூன்று முறை தவறிழைத்தால், வாரம் ஒருமுறை தெருவை சுத்தம்செய்ய வேண்டும். சுவிங்கம் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிங்கம் விற்றால், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை. 1 லட்சம் டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. சாலையில் துப்பினால், 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரம்படித்தண்டனை சிங்கப்பூரில் வெகு பிரபலம். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட 35 குற்றங்களுக்கு பிரம்படி வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரம்படித் தண்டனை வழங்கப்படாது. மரண தண்டனை பெற்றவருக்கும் பிரம்படி வழங்கப்படாது. தவறிழைத்தவர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றால், 10 பிரம்படிகள் வரை வழங்கப்படும். அதிகபட்சமாக 24 அடிகள் வரை வழங்க சட்டத்தில் இடமுள்ளது. 

தண்டனை பெறுபவரின் பாதுகாப்புக்காக, சிறுநீரகத்தைப் பாதிக்காமல் இருக்க தடுப்பு வைக்கப்பட்டிருக்கும். பிரம்பில் ஆன்டிசெஃப்டிக் மருந்தும் தடவப்பட்டிருக்கும். 160 கிலோ மீட்டர் வேகத்தில் அடி விழும். நான்கு அடிக்கே மயங்கிச் சரிந்துவிடுவார்கள். 5 அடிகள் வாங்கினால் பின்பக்கமே சிதைந்துவிடும். மயங்கினாலும் மயக்கம் தெளியவைத்து அடிப்பார்கள். 

 பிரம்படியும் சிங்கப்பூரின் சிறப்புகளுள் ஒன்று.

நீங்க எப்படி பீல் பண்றீங்க