வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2017)

கடைசி தொடர்பு:06:00 (30/10/2017)

முதலாளித்துவத்தை தூக்கியெறிந்தால் மனித குலம் விடுதலையடையும்: சீத்தாராம் யெச்சூரி

சோசலிச புரட்சியின் நூற்றாண்டு மற்றும் காரல் மார்க்ஸின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு தொழிலாளர் நகரமான திருப்பூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 3000-க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, 

`இந்தியாவில் தற்போது நிலவும் சூழல்களைப் பார்த்தால், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசைவிட, தற்போதைய பா.ஜ.க. அரசு கடுமையான பொருளாதார சுமையை மக்கள் மீது திணித்து வருவது அப்பட்டமாக தெரிகிறது. மிக மோசமான நவீன தாராளமயக் கொள்கையை மத்திய பா.ஜ.க. அரசு கடைபிடித்துக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து பட்டியல் இனத்தவர்களும் இஸ்லாமியர்களும் தாக்கப்படுகிறார்கள். தாஜ்மஹால் பற்றிய பல்வேறு சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். 

மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரமே தற்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டு நடவடிக்கைகளுமே நாட்டுக்கு மிகப்பெரும் பேரழிவுகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறவே இல்லை. ஆனால் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் மிகப்பெரிய அளவில் நன்மை அடைந்திருக்கிறார்கள். வங்கிகளில் சேமிக்கப்படும் கறுப்புப் பணத்துக்கு தற்போது வங்கிகளே வட்டி கொடுக்கும் நிலை உண்டாகியிருக்கிறது.

 

 

சிறு, குறு மற்றும் முறைசார தொழில்களை செய்துவரும் மக்களை விரட்டியடித்துவிட்டு, அவர்கள் செய்து வந்த தொழிலையும், பெருநிறுவனங்களிடமே ஒப்படைப்பதுதான் இவர்களின் அதி முக்கிய நோக்கமாக இருக்கிறது. முன் எப்போதுமே இல்லாத அளவுக்கு தற்போதைய மத்திய அரசு, அமெரிக்க ஏகாதிபத்யத்துக்கு அதிகமாக செவிசாய்த்துக்கொண்டு இருக்கிறது.

முதலில் நாம் மனித குலத்தில் முதலாளித்துவம் என்பதை தூக்கியெறிய வேண்டும். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்தால்தான் மனித குலம் விடுதலையடையும் என்று மாமேதை கார்ல் மார்க்ஸ் தெரிவித்திருக்கிறார். மனித குலத்தின் விடுதலை என்பது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கக்கூடிய விஷயம் அல்ல. மனிதர்கள் வாழும் காலத்திலேயே அந்த விடுதலை கிடைக்க வேண்டும். அதற்கு மனித சுரண்டல்களை நாம் முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும்' என்றார்.