வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (30/10/2017)

கடைசி தொடர்பு:12:45 (30/10/2017)

’ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்!’ - ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, கோவையில் பேட்டியளித்த நீதிபதி ஆறுமுகசாமி  தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உயிரிழந்து ஓர் ஆண்டு ஆக உள்ள நிலையில், அவர் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படாமல் உள்ளன. இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள்குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்துக்காக, சென்னை எழிலக வளாகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இயங்கும் குழு, சென்னை போயஸ் கார்டனில் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி, இன்றைய விசாரணையில் கலந்துகொள்ளவில்லை. ஆறுமுகசாமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துவிட்டதால், அவர் புதன்கிழமைக்குப் பிறகே சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு, 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் தெரிவித்துள்ளார். அதற்குரிய விளக்கம் வந்த பிறகே, முதல்கட்ட விசாரணை தொடங்கப்படும் என்றும் ஆறுமுகசாமி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.