வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (30/10/2017)

கடைசி தொடர்பு:13:05 (30/10/2017)

“எஸ்.பி. லீவில் இருக்கிறார்...!' - மணல் கொள்ளைக்கு காஞ்சி போலீஸின் சிக்னல்?

பாலாறு மணல் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் எஸ்.பி, தனது குடும்ப அலுவல் காரணமாக 10 நாள் விடுமுறையில் சென்றிருக்கிறார். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, மணல் அள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை முடித்துக்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் எஸ்.பி-யாக சந்தோஷ் ஹதிமானி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகின்றன. அவர், தனது அதிரடி நடவடிக்கைகளை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். ஸ்ரீதர் தொடர்பான வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளில் அவருக்கு காஞ்சிபுரம் பகுதியில் நல்லபெயர் கிடைத்தது. ரௌடிகளைக் கட்டுப்படுத்துவது, காவலர்களுக்கு உதவுவது, மணல் கொள்ளையைத் தடுப்பது என அதிரடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், எதையும் அலட்டிக்கொள்ள மாட்டார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராகப் பணிபுரிந்த அருண்தம்புராஜ், மணல் கொள்ளையில் அதிரடி காட்டினார். சில மாதங்களுக்கு முன் அவர், பதவி உயர்வுபெற்று திருச்சிக்குச் சென்றார்.

சந்தோஷ் ஹதிமானி, மணல்அதைத் தொடர்ந்து, மணல் விவகாரங்களில் கடுமை காட்டினார் எஸ்.பி. இதனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாஃபியாக்களுக்கு கடிவாளம் போடப்பட்டது. லாரிகள் வைத்துள்ள ஆளும்கட்சிப் புள்ளிகள், மணல் எடுக்கமுடியாமல் தடுமாறினர். இந்த நிலையில், அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால், குழந்தை மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க விடுப்பில்சென்றுள்ளார். இதை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், உள்ளூர் காவல்நிலையத்திற்கு போன்செய்து, 'எஸ்.பி, 10 நாள் விடுப்பில் வெளியூர் போய் இருக்கிறார். அவர் வரும்வரை எவ்வளவு மணல் எடுக்கமுடியுமோ எடுத்துக்குங்க. ஒரு லோடுக்கு இவ்வளவு கமிஷன் கொடுத்துடணும்' என வாய்மொழியாக உத்தரவு கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி விடுமுறையில் இருப்பதால், இதைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக்கொள்ள காஞ்சிபுரம் காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க