திருப்போரூரில் மான்கள் சரணாலயம்... தமிழக அரசின் அறிவிப்பு எப்போது? | Is tamilnadu govt going to setup deer sanctuary in Thiruporur?

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (31/10/2017)

கடைசி தொடர்பு:14:53 (31/10/2017)

திருப்போரூரில் மான்கள் சரணாலயம்... தமிழக அரசின் அறிவிப்பு எப்போது?

திருப்போரூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வனத்துறை முன்வந்திருக்கிறது. மான்கள் சரணாலயம் அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசின் சார்பில் ஆய்வுசெய்வதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது, தமிழகத்தில் வேதாரண்யம், வல்லநாடு ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் சரணாலயம் உள்ளது.

மான்கள்செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் சங்கிலித்தொடர் போல சுமார் 12000 ஏக்கர் அளவில் காப்புக்காடுகள் இருக்கிறன. மான், முள்ளம்பன்றி, எறும்புத்திண்ணி, உடும்பு, காட்டுப்பூணை, ஓநாய், மரநாய், நரி, குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. திருப்போரூர் பகுதியைச் சுற்றி காயார், தையூர், இள்ளளூர், செம்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதியை உள்ளடக்கியிருக்கின்றன. மான்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இங்கு நிலவுவதால், பல்வேறு வகையான மான்கள் அப்பகுதியில் இருக்கின்றன. குறிப்பாக, இப்பகுதிகளில் காணப்படும் வெளிமான் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உள்ளன. அவற்றைப் பாதுகாக்கும் வகையில் இப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வனத்துறை முடிவுசெய்துள்ளது.

திருப்போரூர் பகுதியில் மான்கள் சரணாலயம் அமைவதற்காகக் கடந்த 20 வருடங்களாக வனத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் இருந்துவந்தது. திருப்போரூர் பகுதியில் உள்ள காடுகள் காப்புக்காடுகள் என்பதால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. வனவிலங்குகள் சரணாலயம் அமைய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. இந்த நிலையில் வனத்துறையின் பரிந்துரையின் பேரில் விரைவில் திருப்போரூரில் மான்கள் சரணாலயம் அறிவிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்போரூர் பகுதியில் உள்ள நாவலூர், தையூர், மாம்பாக்கம் உள்ளிட்ட சுமார் 32 கிராமங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் மான்கள் சரணாலயம் அமைய உள்ளது. இதனால் புதிய சாலைகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல் செங்கல்பட்டையைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் சிறுத்தைகள் இருப்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வகைப்படுத்தப்பட உள்ளது.

திருப்போரூர் வனப்பகுதி

திருப்போரூர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்… “தண்ணீருக்காக வனப்பகுதியைவிட்டு வெளியேறும் மான்கள் சாலைகளில் விபத்துக்குள்ளாகி இறந்துவிடுகின்றன. அதுபோல் கடற்கரைப் பகுதிக்குச் செல்லும் மான்களும் இறப்பது தொடர்கின்றன. வனப்பகுதியில் அத்துமீறு நுழையும் மர்மநபர்கள் இறைச்சிக்காக மான்களை வேட்டையாடிவருகின்றனர். மான்கறிகளைத் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதிக அளவு விற்பனை செய்துவருகின்றனர். மான்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லை. அதுபோல் 2016ம் ஆண்டு வர்தா புயலின் காரணமாக ஏராளமான மரங்கள் விழுந்தன. 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக வனத்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் போதிய அளவில் மரங்கள் நடப்படவில்லை. அதிகஅளவில் பயனுள்ள மரங்களை வனத்துறையினர் நடவேண்டும். வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அதிக அளவில் நீர்நிலைகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் நீர்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதில்லை. இதனால், கடந்த ஆண்டு கோடையின் போது நிறைய குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் இறந்தன.

திருப்போரூர் வனப்பகுதி

இதுமட்டுமன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியிருக்கிறது திருப்போரூர் வனப்பகுதி. மது அருந்துபவர்கள் பாட்டில்கள், வாட்டர்பாக்கெட், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்டவற்றை அப்படியே வனப்பகுதியில் விட்டுச் செல்கின்றனர். அதுபோல் காதலர்களும் இங்கே அதிகளவில் வருகின்றனர். இதனால் அடிக்கடி நகைப்பறிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பில்லாத சூழல் இந்த வனப்பகுதியில் நிலவுகிறது. அதுபோல், திருப்போரூர் பகுதியைச் சுற்றியுள்ள கம்பெனிகளிலிருந்து கழிவுகளைக் கொண்டுவந்து வனப்பகுதியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக மருந்து கம்பெனி கழிவுகள் கொட்டப்படுவதால் வனப்பகுதியின் இயல்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மது அருந்த வருபவர்கள் வனப்பகுதியல் தீயை வைப்பதால், அப்பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் மரங்கள் தீப்பற்றி எரிகின்றன.

திருப்போரூர் வனப்பகுதி

வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்தும் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க அப்பகுதியினருக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை வனப்பகுதியில் உள்ளே அனுமதிப்பதால், வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்குத் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வீட்டு விலங்குகளை வனப்பகுதியில் அனுமதிக்கக் கூடாது.” என்கின்றனர்.

திருப்போரூர் பகுதியில் மான்கள் சரணாலயம் அமையப்பெற்றால், மான்கள் பாதுகாக்கப்படுவதோடு,  வனப்பகுதியும் பாதுகாக்கப்படும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close