வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:22 (30/10/2017)

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு த.மு.எ.க சங்கம் புகழாரம்!

பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, இன்று காலை மரணமடைந்தார்.  இவரது மறைவு, இலக்கிய உலகில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. 2007-ம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது வென்றவர், இன்னும் பல விருதுகளை வென்றுள்ளார். 

இவரது மறைவுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதில், ”உழைப்பாளி மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் தன் படைப்புகளின் வழியே உலகத்துக்கு எடுத்துச்சென்ற மகத்தான படைப்பாளி, கரிசல் மண்ணில் கம்பீரமாக எழுந்துநின்று மணம் பரப்பிய எங்கள் வாடாமலர், மேலாண்மை பொன்னுச்சாமியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய 32 எழுத்தாளர்களில் ஒருவரான  இவர், விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்கிற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, தந்தையை இழந்தார். இளம் வயதிலேயே தாயையும் இழந்து, அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி, வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர்கள். 

வறிய பொருளாதாரச் சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்புக்கு மேல்  இவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. குழந்தை உழைப்பாளியாக வாழ்வை எதிர்கொண்ட  இவர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கடலைமிட்டாய் விற்பனை செய்பவராகத் தொடங்கி, சிறுசிறு தொழில்கள் செய்து பின்னர் உள்ளூரிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை ஆரம்பித்து, தம்பியுடன் இணைந்து வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த  இவருக்கு, புத்தகங்களின்மீது தீராக் காதல் இருந்தது. அப்போது  இவர், கதைகளும் எழுதத் தொடங்கினார். அதன் வழியாக செம்மலரோடும்  கே.முத்தையா, எஸ்.ஏ.பெருமாள், அருணன், தி.வரதராசன் ஆகியோரோடு அறிமுகமும் தோழமையும் கிடைத்தது. எஸ்.ஏ.பெருமாள், இவர்மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டு, ஏராளமான புத்தகங்களை  இவருக்கு அளித்து,  இவரது வாசிப்பு வேட்கைக்கு உணவளித்து வளர்த்தெடுத்தார். 'செம்மலர்'  இவரை அரவணைத்தது.  இவருடைய கதை இல்லாத ஒரு செம்மலர் இதழும் வராது என்கிற அளவுக்கு தொடர்ந்து  இவர் செம்மலரில் எழுதினார். பின்னர், செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இணைந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

செம்மலர் எழுத்தாளர்கள் கூடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1975-ல் உருவாக்கியபோது, அதன் முன்னணிப் படைவீர்ராக நின்று இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, மாவட்டந்தோறும் பயணம் செய்து, அவர்களைச் சந்தித்து உரையாடி சங்கத்தில் இணைத்தார். த.மு.எ.ச-வை ஒரு மாநிலம்தழுவிய அமைப்பாக வளர்த்தெடுத்ததில்  இவரது பங்கு மகத்தானது. த.மு.எ.ச-வின் மாநிலத் துணைச்செயலாளராகப் பணியாற்றத் தொடங்கிய  இவர் பின்னர், த.மு.எ.ச-வின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னையும் தன் வாழ்வையும் இரண்டறக் கரைத்துக்கொண்ட  இவர், உழைக்கும் மக்களுக்கான நேரடிப் போராட்டங்களில் பங்கேற்றுப் பல முறை சிறைசென்றார். பொது வெளியிலும் இலக்கிய உலகிலும் புறக்கணிப்புகளை முற்போக்காளர்கள் சந்தித்த காலங்களில், சங்கத்தின் முகமாக இருந்து சவால்களை எதிர்கொண்டவர் மேலாண்மை. பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டிருந்தாலும் தன் சொந்த உழைப்பாலும் வாசிப்பாலும் தன் தத்துவப்பார்வையையும் படைப்புத் திறனையும் வளர்த்துக்கொண்டு எழுந்து நின்ற படைப்பாளி  இவர். த.மு.எ.ச படைப்பாளிகளுக்கு விருதுகள் என்கிற அத்தியாயத்தைத் துவக்கி வைத்தவரும்  இவரே. ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும் 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். கல்கி, ஆனந்த விகடன் போன்ற வெகுசன இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதிய முதல் த.மு.எ.ச படைப்பாளியும்  இவர்தான். இவருடைய படைப்புகள் எல்லாமே எளிய கரிசல்காட்டு உழைப்பாளி மக்களின் வாழ்வையும் வறுமையையும், அதன் அழகுகளையும் நுட்பங்களையும் பற்றிப் பேசியவையே. வியர்வையின் வாசம் மணக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் மேலாண்மை பொன்னுச்சாமி.

அவருடைய மகன் வெண்மணிச்செல்வனும் இலக்கியத் தாகம்கொண்ட ஒரு வளரும் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் குன்றியபின், தன் மகனுடன் சென்னை- மணலியில் வாழ்ந்துவந்தார்.  இவர் மறைந்த செய்தி, தமிழகம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. த.மு.எ.க.ச-வுக்கு  இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  இவரது இழப்பால் துயருற்றிருக்கும்  இவரின் இணையருக்கும் மகன், இரண்டு மகள்களுக்கும், முற்போக்கு இலக்கிய உலகுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். த.மு.எ.க.ச கொடிதாழ்த்தி, அவருக்கு அஞ்சலிசெலுத்துகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், “தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் என்று கம்பீரமாக அறிவித்துக் கொள்வதில் பெருமை கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. முற்போக்கு இலக்கிய உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு என்றென்றும் அவரை நினைவு கூரச் செய்யும் என்பது உறுதி. கடைசி வரை கட்சியின் பெருமைமிக்க படைப்பாளியாக திகழ்ந்த அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது ” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்