வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:39 (30/10/2017)

கனமழை எச்சரிக்கை எதிரொலி: இலவசத் தொலைபேசி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு

`கனமழை, புயல் வெள்ளம், பேரிடர் போன்றவற்றை எதிர்கொள்ளும் விதமாக, புதுச்சேரி மாநிலத்தில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.

கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதையொட்டி, கடலோர மாவட்டகளில் மட்டுமல்லாமல் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்தக் கனமழை, வரும் 5-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில், இன்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரி

இந்நிலையில், இவற்றை எதிர்கொள்ளும் விதமாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், உள்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க பொதுப்பணித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கனமழையின்போது குடிநீரைத் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். பொதுப்பணித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதனால், மழை பாதிப்புகள்குறித்த புகாரை 1077, 1070 என்ற இரண்டு இலவசத் தொலைபேசி எண்களில் அழைத்து அளிக்கலாம். வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கனமழை, புயல் வெள்ளம், பேரிடர் போன்றவற்றை எதிர்கொள்ளும் விதமாக 2,000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் வெள்ள பாதிப்பைத் தடுக்கும் விதமாக, 147 கிலோமீட்டருக்கு வாய்க்கால்களைத் தூர்வார ரூ.3.60 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இரண்டு தினங்களில் தொடங்கும்” என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க