போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை!

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த நுகர்வோர் மையம் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. அதில், ‘வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலைகளின் மத்தியிலும் குறுக்கிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து, அவை விளம்பரங்களுக்காகப்  பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், இதுபோல விளம்பரப் பலகைகள் அதிகம் வைத்திருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அவர்களது கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனால், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.  

இந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருத்திருந்த நிலையில், தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை விதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், போக்குவரத்து சிக்னல்களில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களின் கால அளவு முடிந்தவுடன், அதற்கான அனுமதியைப் புதுப்பிக்கக்கூடாது என்றும், அதேபோல, போக்குவரத்து சிக்னல்களில் புதிதாக விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!