வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (30/10/2017)

கடைசி தொடர்பு:16:25 (30/10/2017)

கூடங்குளம் அணுஉலைப் பணிகள் தீவிரம்: ரஷ்யாவிலிருந்து உதிரிப் பாகங்கள் வருகை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அவற்றுக்கான உதிரிப் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து வரத்தொடங்கி உள்ளன.

அணு உலை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், இரு அணுஉலைகள் செயல்பட்டுவருகின்றன. இரு அணுஉலைகளிலும் வணிகரீதியிலான மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. முதலாவது அணு உலையில் தற்போது, 910 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது. இரண்டாவது அணுஉலையில் பழுது ஏற்பட்டதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி நிறுத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக கூடங்குளம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடத்தப்பட்டது. ஆபத்து காலத்தில், பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எப்படி ஊருக்கு வெளியே அழைத்துச்செல்லப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

அப்போது பேசிய அணுமின் நிலைய வளாக இயக்குநரான ஜின்னா, ’’கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் 910 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிவருகிறது. இரண்டாவது அணுஉலையில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, இரண்டு வாரங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். 3 மற்றும் 4-வது அணுஉலை அமைக்க கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அணு உலைக்கான பணிகள் வேகமாக நடக்கின்றன’’ என்றார்.

இதனிடையே, புதிதாகக் கட்டப்பட்டுவரும் அணுஉலைக்கான உதிரிப் பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வரத் தொடங்கியிருக்கின்றன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்துசேர்ந்துள்ள அந்தப் பொருள்கள் இறக்கப்பட்டு, கூடங்குளத்துக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரியவந்துள்ளது. கூடங்குளத்தில், கூடுதல் அணுஉலைகள் அமைக்க சுற்றுப்புற கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும்நிலையில், அணுஉலைக்கான உதிரிப் பாகங்கள் வரத்தொடங்கியிருப்பது பொதுமக்களை கவலை அடையவைத்துள்ளது.