வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:28 (30/10/2017)

கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை! - மனுவை முடித்துவைத்த சென்னை போலீஸ்

''நிலவேம்புக் குடிநீர் குறித்த ட்விட்டர் பதிவு தொடர்பாக, நடிகர் கமல் மீது வழக்குப் பதிய எந்த முகாந்திரமும் இல்லை'' என்றுகூறி மனுவை சென்னை போலீஸார் முடித்துவைத்தனர். 

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கடந்த 18-ம் தேதி கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார், நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று பதிவிட்டிருந்தார். 


நடிகர் கமல்ஹாசனின் இந்தப் பதிவு, மக்களிடையே நிலவேம்பு குடிநீர் குறித்து அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறி, அவர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் மனு அளித்தார். பின்னர்,  அந்த மனு மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் முறையிட்டார். இதுகுறித்து விசாரித்து உரிய முடிவெடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. 
நிலவேம்பு தொடர்பான கமலின் கருத்து தொடர்பாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாமா என்பதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் அரசு வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, தேவராஜன் அளித்த மனுவை சென்னை போலீஸார் முடித்துவைத்தனர். 

இதுதொடர்பாக மனு அளித்த தேவராஜனுக்கு சென்னை போலீஸார் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நடிகர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் நிலவேம்புக் குடிநீர் பற்றி மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளதாக மனு அளித்திருந்தீர்கள். அந்த மனுவின்மீது விசாரணை மேற்கொண்டதில், அதுதொடர்பாக குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்பதால், தங்களது மனு முடிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.