விளைநிலங்களை அபகரிக்கும் அதானி குழுமத்தினர்! எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்

கமுதிப் பகுதியில் விவசாயிகளை மிரட்டி விளை நிலங்களை அபகரிக்கும் அதானி குழுமத்தினரின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தாவிடில் தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனப் பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் 55-வது குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்  ''கருணாநிதி சார்பில் தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். தேவரின் நினைவினைப் போற்றும் வகையில் மதுரை கோரிப்பாளையத்தில் பிரமாண்ட சிலை அமைத்ததுடன், அவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

சாதி, பேதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ வழிகாட்டிய அந்தப் பெருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்குச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில்  தி.மு.க ஆட்சி விரைவில் மலரும். அப்போது இந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ராமநாதபுரம் மாவட்டம்  கமுதிப் பகுதிகளில் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களை அதானி குழுமத்தினர் அபகரித்து வருகின்றனர். மத்திய அரசின் ரியல் எஸ்டேட் புரோக்கர் அரசான தமிழக அரசு இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் மாவட்ட தி.மு.க சார்பில் இதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி, பவானிராஜேந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர் திவாகரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!