வீட்டை இடிக்க வேண்டாம்; பராமரித்துக்கொடுங்கள்! குடியிருப்புவாசிகள் உருக்கம் | Residents requests to Government, 'Do not Demolish our homes"

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (30/10/2017)

கடைசி தொடர்பு:17:45 (30/10/2017)

வீட்டை இடிக்க வேண்டாம்; பராமரித்துக்கொடுங்கள்! குடியிருப்புவாசிகள் உருக்கம்

சேலம் குகை நேரு நகர் ஹவுஸிங் போர்டு வீடுகள் சிதிலமடைந்து விழும் தருவாயில் இருப்பதால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அந்த ஹவுஸிங் போர்டு குடியிருப்புகளை இடிப்பதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதையடுத்து அங்குள்ள குடியிருப்பு வாசிகள் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை இடிக்கவிட மாட்டோம். திடீரெனக் காலி செய்யச் சொன்னால் குழந்தை, குட்டிகளோடு எங்கே செல்வோம் என்று போர்கொடித் தூக்கி இருக்கிறார்கள்.

இதுபற்றி ஊர் தலைவர் அண்ணாதுரையிடம் பேசினோம். ''தமிழ் நாடு வீட்டு வசதி சார்பாகக் குகை பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹவுஸிங் போர்டில் 252 வீடுகள் இருக்கின்றன. இதில், 40 ஆண்டுகளாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். தற்போது ஹவுஸிங் போர்டை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டப்போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். திடீரென நோட்டீஸ் கொடுத்து காலி செய்ய சொன்னால் குடும்பத்தோடு நாங்கள் எங்கு செல்ல முடியும். எங்களுக்கு வெளியில் வாடகைக்குகூட வீடுகள் யாரும் தர மாட்டார்கள். இங்கு இருப்பவர்கள் செருப்பு தைக்கவும் துப்புரவு பணி செய்து, மரக்கடையில் ரிக்‌ஷா இழுத்தும் வேலை செய்யக் கூடியவர்கள். இந்த வீட்டை விட்டுட்டு வெளியில் சென்று வாடகை கொடுத்து குடியிருக்க முடியாது. அதனால் வீட்டை இடிக்காமல் பராமரிப்பு மட்டும் செய்து கொடுத்தாலே போதும்'' என்றார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் கூறுகையில், ''சமுதாயத்தில் நலிவுற்ற மக்கள் குடியிருப்பதற்காக அரசு வீட்டு வசதி வாரியத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டை முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென இடிப்பதாக நோட்டீஸ் கொடுத்தால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்து அவர்களுக்கே மீண்டும் வீடு கொடுப்போம் என்ற உறுதிமொழிகளைக் கொடுத்து இடித்தால் வரவேற்கலாம். ஆனால், திடீரென கந்து வட்டிக்காரர்களைப்போல அரசு செய்வது தவறானது. அதனால் வீட்டை இடிப்பதற்குப் பதில் புதுப்பித்துக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்'' என்றார்.