ஆச்சர்யப்பட வைத்த சிறுமிகள்... களத்தில் இறங்கிய பொதுமக்கள்

மதுரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நகராட்சியான உசிலம்பட்டியை முன்னேற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளோ அரசோ பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வராத நிலையிலும் அதையும் கடந்து இங்குள்ள மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்களென்றால் அதற்கு காரணம், பொதுப்பிரச்னைகளில் மக்களே இறங்கி வேலை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வு என்று சொல்லலாம்.

உசிலம்பட்டி

நகரின் நீராதாரமான உசிலம்பட்டி கண்மாய் பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் முயற்சியால் 10 மாதங்களுக்கு முன் தூர்வாரப்பட்டது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கண்மாய்க்குள் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் இரண்டாவது முறையாகக் கண்மாயைச் சுத்தப்படுத்தும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு உசிலம்பட்டி லயன்ஸ் கிளப் ஜே.சி.பி இயந்திரம் கொடுத்து உதவியது. உசிலம்பட்டி கோட்டாச்சியர் சுகன்யா தூர்வாரும் பணியைத் துவக்கி வைத்தார்.

மக்கள்

இப்பணியில்  உசிலம்பட்டி கண்மாய் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், அரிமா சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் வினுபாலன், மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏழு நாள்களைக் கடந்து தொடர்ந்து நடந்துவரும் தூர்வாரும் பணிக்கு, உசிலம்பட்டியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் தியாகேஷ், இளமதி, தர்ணிஸ்ரீ ஆகியோர் தங்களது சிறுசேமிப்புத் தொகையை உண்டியலுடன் வழங்கி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தனர். சேவை எண்ணம் கொண்டோரின் முயற்சியால் கண்மாய்த் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!