வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (30/10/2017)

கடைசி தொடர்பு:18:04 (30/10/2017)

பள்ளிகளுக்கு விடுமுறை... ஒரு நாள் என்பது ஒரு மணி நேரம் ஆன குழப்பம்!

மழை

ழக்கம்போல பருவமழை ஆரம்பித்துவிட்டது. வழக்கம்போலவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான தன்னுடைய விளையாட்டையும் தொடங்கிவிட்டது அரசு நிர்வாகம். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் முன்னறிவிப்பை சரிவர ஆராய்ந்து உரிய வகையில் விடுமுறையை அறிவிப்பதை ஒருபோதும் செய்வதில்லை தமிழக அரசு நிர்வாகம். இதன் காரணமாக மாணவ,மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகள், பள்ளிக்கூட ஆட்டோ டிரைவர்கள் என்று பலரும் திண்டாடுவது இங்கே ஆண்டுதோறும் தொடர்கதை ஆகிறது. திடீர் திடீர் என்று விடுமுறை விடுவது... அல்லது விடுமுறை விடாமல் மழையில் அலைக்கழிப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இன்றும் (அக்டோபர் -30) அப்படித்தான் நடந்தது. இன்று அதிரடியாக கொட்டித்தீர்த்த மழையில், கிட்டத்தட்ட சென்னை மாநகரம் மிதக்க ஆரம்பித்த சூழலில், அதில் சிக்கிக்கொண்டு சின்னாப்பின்னபட்டனர் மாணவ, மாணவிகள்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. படிப்படியாக பருவமழையின் வேகம் அதிகரித்து, மூன்றாவது நாளான இன்று (அக்டோபர் 30) அதிகாலையில் இருந்தே மழை கொட்டியது. முக்கியமாக சென்னை மாவட்டம் மிதக்க ஆரம்பித்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்த ஒரு நாள் மழைக்கே ஆங்காங்கு மழை வெள்ளம் தேங்கியது. சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததாலும், சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் இருந்ததாலும் மழைநீர் தேங்கி போக்குவரத்தை முடக்கியது. 

ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கள்கிழமையான இன்று காலை 7.30 மணிக்கு பள்ளிக்குச் செல்ல மாணவ, மாணவிகள் புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கனமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது. இதுபோன்ற சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதுதான் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும். ஆனால், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், "கனமழை நீடித்தாலும் வழக்கம்போல இன்று பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்" என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பலரையும் திகைக்க வைத்துவிட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் எந்தவித அறிவிப்பையுமே வெளியிடவில்லை.

சரியாகப் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக கனமழை ஆரம்பித்ததால் என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்த பெற்றோர், சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை அடுத்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். பலர் தாங்களே அழைத்துச்சென்றனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் காலையிலிருந்தே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. இதற்கு நடுவில், நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்காக அண்ணா சாலை முடங்கிப் போனதன் எதிரொலி... அக்கம் பக்கத்து சாலைகளையெல்லாம் வாகனங்களால் நிறைய, கிட்டத்தட்ட மாநகரமே ஸ்தம்பித்தது. பள்ளி செல்லும் வேன், பஸ்கள் எல்லாம் இந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வழக்கத்தைவிட தாமதமாகவே மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றன. 

சில பள்ளிகளில் வாராந்திர தேர்வு (Weekly test) வைக்கப்பட்டிருந்தது. கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு வேறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், விடுமுறையும் எடுக்க முடியாத சூழ்நிலை. இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் என்று பள்ளிக்கூட சாலைகளை முற்றுகையிட... பள்ளிக்கூட ஏரியாக்கள் எல்லாம் மொத்தமாகப் போக்குவரத்து தடைபட்டுப்போனது. பள்ளிக்கூட நுழைவாயில், வராண்டாக்கள், விளையாட்டுத்திடல்கள் மற்றும் பல பள்ளிகளின் வகுப்பறைகளிலும் மழைநீர் தேங்கிவிட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். பல இடங்களில் மழைநீர் கால்வாய்கள் தோண்டிய நிலையிலேயே இருக்க, அதில் கார்களும் டூவீலர்களும் சிக்கிக்கொள்ள, அவற்றுடன் வேறு பெற்றோர் போராடிக் கொண்டிருந்தது, கொடுமையிலும் கொடுமை.

இந்நிலையில், காலை 11 மணியளவில்... "மழையின் தாக்கம் இன்னும் மூன்று நாள்களுக்கு அதிகமாக இருக்கும்" என்று சென்னை வானிலை மையம் அறிவிக்க, இதையடுத்து அவசர அவசரமாக சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பள்ளிக்கூட வகுப்புகளை முடித்துக் கொண்டு மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக் கூடாது’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, தனியார் பள்ளிகள் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பெற்றோர்களுக்குத் தகவலை அனுப்பிவிட்டன. மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பின.

அதேசமயம், காலையில் அவதிப்பட்டதைப் போலவே மதியமும் பெற்றோர்கள் அவதிப்பட்டனர். பள்ளி நிர்வாகங்கள் மற்றும் தனியார் வேன் உரிமையாளர்களும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான பிள்ளைகள் தனியார் வேன் மூலம்தான் பள்ளிக்கு வருகின்றனர். இதனால், பள்ளி நிர்வாகத்தினரும் மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் குழப்பத்துக்கு உள்ளானார்கள். தனியார் வேன் டிரைவர்களும் இந்த திடீர் அறிவிப்பால் அவசர அவசரமாக வேன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வழக்கமான நேரத்தில்தானே பள்ளியை மூடுவார்கள் என்று வழக்கம்போல வெவ்வேறு சவாரிகளுக்குச் சென்றிருந்த ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் வேன்களை எடுத்துக்கொண்டு பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாமல் போனது. சென்னை மட்டுமல்ல, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களும் இப்படி ஒரு மணி நேர விடுமுறையை அறிவித்ததால் அங்கெல்லாமும் மிகுந்த சிரமத்துக்குத்தான் ஆளானார்கள் பலரும்.

 

தேவநேயன்குழந்தைகள் செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான தேவநேயன் கூறுகையில், ''குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாததே இத்தகைய குழப்பத்துக்குக் காரணம். வானிலை மையம், மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, வரும் நாள்களிலாவது இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். திடீர் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமலேயே இந்த முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள். காலையிலேயே இன்று விடுமுறை என அறிவித்திருந்தால் தேவையான மாற்று ஏற்பாடுகளைப் பெற்றோர்கள் செய்திருப்பார்கள். காலையில் ஒரு முடிவைச் சொல்லி விட்டு, மாலையில் ஒரு மணி நேரம் விடுமுறை என்று சொல்லும் போது அந்தக் குழந்தைகள் வீட்டிற்கு செல்லும் ஏற்பாடுகள் என்ன? வீட்டுக்குச் சென்றால் அவர்களை வரவேற்க பெற்றோர்கள், பாதுகாவலர்கள் இருப்பார்களா? என்றெல்லாம் யோசித்து இந்த முடிவு எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அதிகாரிகள் நலனை முன்வைத்து முடிவு எடுத்தால் இப்படித்தான் குழப்பம் ஏற்படும். குழந்தைகளின் சிறந்த நலனை முன்வைத்து முடிவு எடுத்தால்தான் அவர்களின் நலன் பாதுகாக்கப்படும். ஒரு நாள் விடுமுறை கூடுதலாகவே விட்டுவிட்டாலும் ஒன்றும் தவறு இல்லை. பள்ளிகள் விடுமுறை விஷயத்தில் அந்தந்தப் பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுமே முடிவு எடுக்கலாம். அந்தந்த வட்டார நிலை அவர்களுக்குத்தான் தெரியும். இனி வரும் நாள்களிலாவது குழப்பம் இல்லாமல் செயல்படுங்கள்'' என்றார்.

காலையிலேயே முன்யோசனையோடு முடிவெடுத்து விடுமுறையை அறிவித்திருந்தால், இந்தப் பிரச்னையே இருந்திருக்காது. ஆனால், எப்போதும் தடுமாற்றத்துடனேயே அரசு நிர்வாகங்கள் முடிவுகளை எடுப்பதால், மாணவ&மாணவிகளின் அவதி தொடர்கதையாகவே இருக்கிறது.

இனியாவது, உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பார்களா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்